தஞ்சாவூர்: உலகம் முழுவதும் பிப்ரவரி 14ஆன இன்று காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. இதனை ஒட்டி, பரிசுப் பொருட்கள் உள்ளிட்ட காதலர்கள் பலரும் தங்களுக்குப் பிடித்தவற்றை பரிசளித்து அன்பை பரிமாறிக் கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், “தெய்வீக காதலர்களுக்கு ஒவ்வொரு நாளும் காதலர் தினம்தான், எனவே, காதலர் தினத்தை மத்திய மாநில அரசுகள் தடை செய்ய வேண்டும் என்றும், தெய்வீக காதலுக்கும், தெய்வீக காதலர்களுக்கு நாங்கள் எதிரியல்ல’ என இந்து மக்கள் கட்சி அனுமன் சேனா அமைப்பு குறிப்பிட்டு உள்ளது.
அதேநேரம், காதலர்கள் என்ற போர்வையில், இந்து வழிபாட்டுத் தலங்களில், குழந்தைகள், பெரியவர்கள், பொதுமக்கள் என கூடும் இடங்களில் அருவறுக்கதக்க, முகம் சுளிக்கச் செய்யும் வகையில் நடந்து கொள்ளும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி காதலர் தினமான இன்று, கும்பகோணம் தாராசுரம் வீரபத்திரசுவாமி திருக்கோயிலில் இருந்து, இந்து மக்கள் கட்சி அனுமன் சேனா அமைப்பின் சார்பில், மாநில பொதுச் செயலாளர் கா பாலா தலைமையில், 10க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஒரு வித்தியாசமான ஊர்வலம் மேற்கொண்டனர்.
இதன்படி, தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோயில் வளாகத்தில் உள்ள பூங்காவில், காதல் ஜோடிகளைக் கண்டால் அவர்களுக்கு திருமணம் செய்து வைக்கும் நோக்கோடு, தாலி கயிறு, மங்கல அட்சை, அரசாணிக்கால், மாவிலைகள், தேங்காய், பழம், வெற்றிலைப்பாக்கு ஆகியவற்றுடன் நாதஸ்வர மேள தாள மங்கல வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக புறப்பட்டு, தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோயில் பூங்காவை நோக்கி அவர்கள் ஊர்வலமாக வந்தனர்.
அப்போது, அவர்கள் அனைவரையும் கோயில் பூங்கா முன்பு, கும்பகோணம் தாலுகா காவல் ஆய்வாளர் கவிதா தலைமையிலான போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனைத் தொடர்ந்து, அவர்கள் அங்கே கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து, அவர்கள் அனைவரையும் கைது செய்து, அங்கிருந்து ஒரு வேன் மூலம் தனியார் திருமண மண்டபத்திற்கு கொண்டு சென்று தங்க வைத்தனர்.
மேலும், காதலர் தினத்தை முன்னிட்டு, கோயில் பூங்கா வளாகத்தின் அனைத்து நுழைவு வாயில் பகுதிகளிலும் காதலர்களின் வருகையினை போலீசார் தடுத்து நிறுத்தி, அவர்களை திரும்பி அனுப்பி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தெரிந்து கொள்ளுங்கள்: கருவுறுதல் பற்றிய கட்டுக் கதைகளும்... உண்மைகளும்...!