மதுரை: தமிழக அரசின் ஆதிதிராவிட நலத்துறை செயலரை நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கில் சேர்த்து, உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு தொடர்பாக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? அதன் தற்போதைய நிலை என்ன? என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடியைச் சேர்ந்த மல்லிகா என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுவினை தாக்கல் செய்திருந்தார் :அதில், ''நானும் எனது கணவரும் காட்டு நாயக்கன் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். எங்களுக்கு ஐந்து குழந்தைகள் உள்ள நிலையில் குழந்தைகளின் கல்வி தேவைக்காக சாதி சான்றிதழ் வழங்க கோரி திருச்செந்தூர் வருவாய் மண்டல அலுவலரிடம் விண்ணப்பித்தோம்''.
''எங்களின் சமூகத்தை உறுதி செய்வதற்காக ரத்த வழி உறவுகளின் சாதிச் சான்றிதழை வழங்குமாறு கூறியிருந்தார். அதன் அடிப்படையில் எனது உறவினரின் சாதி சான்றிதழ் வழங்கப்பட்டது. இருப்பினும் சாதி சான்றிதழ் வழங்கப்படவில்லை. இதனால், குழந்தைகளின் கல்விக்கான சலுகை வேலை வாய்ப்பு போன்றவை பாதிக்கப்படுகிறது. ஆகவே எனது குழந்தைகளுக்கு இந்து காட்டு நாயக்கன் என்ற பிரிவின் கீழ் சாதி சான்றிதழை வழங்க உத்தரவிட வேண்டும்'' என கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சுப்பிரமணியன், விக்டோரியா கௌரி அமர்வு, " உச்ச நீதிமன்றம் மாதிரிபட்டீல் வழக்கில், அந்தந்த மாநிலங்கள் வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்கலாம் என குறிப்பிட்டுள்ளது. ஆனால், தமிழகத்தில் 30 ஆண்டுகளாகியும் உருவாக்கப்படவில்லை. ஆகவே, தமிழக அரசின் ஆதிதிராவிட நலத்துறை செயலரை நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கில் சேர்க்கிறது. அவர் உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு தொடர்பாக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? அதன் தற்போதைய நிலை என்ன? என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க: தூத்துக்குடி மீனவர்கள் 22 பேர் இலங்கை கடற்படையால் கைது.. ஆட்சியரிடம் மனு அளித்த பிறகு மீனவர்கள் கூறியது என்ன?