மதுரை: சாட்டை துரைமுருகன் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் முன்ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்திருந்தார். அதில், "விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரசாரத்தின் போது, முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி குறித்து அவதூறாகப் பேசியதாக, திருச்சி சைபர் கிரைம் போலீசார் என்னைக் கைது செய்தனர். பின்னர் நீதிபதி சிறையில் அடைக்க அனுமதி மறுக்கப்பட்டதால் விடுதலை செய்தனர்.
கைது செய்யப்பட்டதற்கு எஸ்.பி வருண்குமார் தான் காரணம் எனவும், விமர்சனங்களைச் சீமான் முன்வைத்திருந்தார். சமூக வலைத்தளங்களில் மோசமான கமெண்டுகளும் பதிவு செய்யப்பட்டிருந்தன. இது தொடர்பாக வருண்குமார் எஸ்.பியால் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், திருச்சி சைபர் கிரைம் போலீசார் என்மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் வழக்கு விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைக்க தயாராக இருக்கிறேன். ஆகவே இந்த வழக்கில் எனக்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி பரதசக்கரவர்த்தி முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பு வழக்கறிஞர் கூறுகையில், "சாட்டை துரைமுருகன் உள்ளிட்டோர் மீது காவல்துறை அதிகாரி வழக்குப்பதிவு செய்து தனது கடமையைச் செய்தார் என்பதற்காக, திருச்சி எஸ்பி வருண்குமார் மீது சமூக வலைத்தளங்களில் அவதூறான கருத்துக்களைப் பதிவு செய்து வருகின்றனர்.
இது பணியில் உள்ள அதிகாரிகளை அச்சுறுத்தும் செயல். இவர்களை கைது செய்ய வேண்டும். எனவே இவர்களுக்கு ஜாமீன் வழங்கக் கூடாது. அதுமட்டுமின்றி, ஏற்கனவே உயர்நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட விதிமுறைகளைத் தொடர்ந்து மீறுகின்றனர்" என அரசு தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து பேசிய நீதிபதி, சமூக வலைத்தளங்களில் லட்சக்கணக்கானோர் பின்பற்றுகின்றனர். அவ்வாறு இருக்கையில், தொடர்ந்து முன்னாள் முதலமைச்சர்கள், காவல் அதிகாரிகள் குறித்து அவதூறு பரப்புவது ஏன்? என சரமாரியாகக் கேள்வி எழுப்பினர். பின்னர், சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட அனைத்துப் பதிவுகளையும் இருவர் தரப்பிலும் தாக்கல் செய்ய வேண்டுமென உத்தரவிட்ட நீதிபதி, வழக்கு விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: உதயநிதி ஸ்டாலினுக்கு எதிரான வழக்கு; பொள்ளச்சி ஜெயராமன் ஆஜராக உத்தரவு!