மதுரை: மதுரையைச் சேர்ந்த கோகுல் அபிமன்யு உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில்,"விசாரணை நீதிமன்றங்களில் நடக்கும் வழக்கு விசாரணைகளின் போது, சாட்சிகளின் வாக்குமூலத்தில் சாட்சி அளிப்பவரின் சாதி மற்றும் மதம் குறிப்பிடப்படுகிறது.
இதனை விசாரணை நீதிமன்றம் ஒரு நடைமுறையாகவே கொண்டுள்ளது. இதனால் நீதிபதியும், வழக்கறிஞர்களும் சம்பந்தப்பட்ட நபரின் சாதி மற்றும் மதம் தொடர்பான விபரங்களை அறிந்து கொள்ள ஏதுவாக அமைகிறது. உச்சநீதிமன்றமும் விசாரணை நீதிமன்றம் வாக்குமூலம் பெறும்போது சாதி மற்றும் மத அடையாளத்தை சேகரிக்க தேவையில்லை என குறிப்பிட்டும், விசாரணை நீதிமன்றங்களில் இந்த நடைமுறை தொடர்கிறது.
இதையும் படிங்க: "சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பொய்யான புகார் அளித்த தாய் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு"- உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!
ஆகவே விசாரணை நீதிமன்றங்கள் சாட்சிகளின் வாக்குமூலம் பெறும்போது, அவர்களின் சாதி மற்றும் மதத்தை குறிப்பிட தேவையில்லை எனவும் எந்த ஆவணங்களிலும் சம்பந்தப்பட்டவர்களின் சாதி மற்றும் மத அடையாளத்தை குறிப்பிடத் தேவையில்லை எனவும் உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எஸ் ரமேஷ், மரியகிளட் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. உயர்நீதிமன்ற பதிவாளர் தரப்பில், "உரிமையியல் வழக்குகளில் சாட்சிகளின் சாதி, மத அடையாளத்தை குறிப்பிடத் தேவையில்லை" என உச்சநீதிமன்ற உத்தரவு உள்ளது. ஆனால் குற்றவியல் வழக்குகளில் அது போன்ற வழிகாட்டுதல்கள் இல்லை. தற்போது இந்த விவகாரம் குற்றவியல் விதிக்குழுவின் பரிசீலனையில் உள்ளது" என தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து நீதிபதிகள் வழக்கினை நவம்பர் 21ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.