சென்னை: தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ஹசீனா சையத், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது கூறியதாவது, "இந்திரா காந்தியால் துவங்கப்பட்ட மகளிர் காங்கிரஸ்-க்கு தமிழ்நாடு மாநில தலைவியாக பொறுப்பேற்றுள்ளேன்.
அனைத்து காங்கிரஸ் நிர்வாகிகளுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தியா ஒரு இக்கட்டான சூழ்நிலையில் உள்ளது என்பதை யாராலும் மறுக்க முடியாது. நமக்கென்று ஒரு பாரம்பரியம் உள்ளது. ஆனால், நம்மை ஆண்டு கொண்டிருக்கும் பாஜக பாசிச சக்தி, இதற்கு எதிர்மறையான விஷயங்களை செய்து கொண்டிருக்கிறது.
எப்பொழுதும் தமிழ்நாட்டில் பாஜகவை மக்கள் நமக்கு உறுதுணையாக எதிர்த்து கொண்டு தான் இருக்கிறார்கள். ஆனால், பாஜக நமது நாட்டின் வேற்றுமையில் ஒற்றுமையை சுரண்டுவதற்கான பல விதமான சூழ்ச்சிகளை செய்து வருகிறது. அவை அனைத்தையும் தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் முழுமையாக எதிர்க்கும்.
நேற்று ராஜஸ்தானில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, தமிழ்நாட்டில் நமது பெண்கள் உயிரை விட மேலாக மதிக்கும் தாலியைப் பற்றி கேலியாக பேசியுள்ளார். பாஜக மகளிரணியில் பொறுப்பாளராக இருக்கும் வானாதி சீனிவாசன் என்றாவது தமிழ்நாட்டில் பாதிக்கப்படும் பெண்கள் குறித்து பேசி உள்ளாரா?
மணிப்பூரில் நடந்த கொடுமைகள் பற்றி பேசியுள்ளாரா? இது போன்று பாஜகவில் இருக்கும் ஒவ்வொரு தலைவர்களும் பெண்களை கேலியாகவும், அவதூறாகவும் பேசுகின்றனர். இனியும் தமிழ்நாட்டு மகளிர் காங்கிரஸ் அணி இதை பார்த்துக் கொண்டு சும்மா இருக்காது.
பெண்களுக்கான நியாயங்களை மையமாகக் கொண்டு ராகுல் காந்தி நடைபயணம் மேற்கொண்டார். பெண்களுக்கு எதிராக ஒரு அநியாயம் நடக்கிறது என்றால், அதில் முதல் குரல் கொடுப்பவர் எங்கள் ராகுல் காந்தி தான். நிச்சயமாக காங்கிரஸ் ஆட்சி வரும்பொழுது, பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நியாயம் கிடைக்க நாங்கள் உறுதுணையாக இருப்போம்.
கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி தேர்தல் அறிக்கை வெளியிடும் பொழுது, பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாட்டிற்கு என்று ஒரு பாரம்பரிய மையம் திறக்கப்படும் எனக் கூறுகிறார். அப்படிப்பட்ட பிரதமர், தமிழுக்கான முன்னெடுப்பு வரும்பொழுது ஆதரிக்கிறாரா என்றால், இல்லை.
அந்த ஒரு காலத்தில் ஆங்கிலேயர்கள் எப்படி நமது நாட்டை ஒரு வளமிக்க நாடாகப் பார்த்து சுரண்டினார்களோ, அதே போன்று இப்பொழுது பிரதமர் தென்தமிழ்நாட்டை ஒரு வளமிக்க மாநிலங்களாகப் பார்த்து களவாட நினைக்கிறார் என்றால், அந்த பாசிசத்தை நாங்கள் எதிர்க்கிறோம். மாநிலங்களில் ஆளுநர்கள் மூலம் குளறுபடியை உண்டு பண்ணுகிறார். தாலி அறுப்பு போராட்டம் எந்த கட்சி செய்தாலும் அது நியாயம் கிடையாது" என்றார்.
தொடர்ந்து, காங்கிரசிலிருந்து வெளியேறிய விஜயதாரணி, பெண்களுக்கு காங்கிரசில் முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை எனக் கூறியது குறித்து கேட்டதற்கு, "அகில இந்திய மகளிர் காங்கிரஸ் கமிட்டியில் கிட்டத்தட்ட 12 வருடங்களாக இருக்கிறேன். என்னுடன் அவரும் இருந்தார். எனக்கு முன்பு அவர் மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்துவிட்டார்.
அவருக்கு அங்கீகாரம் கிடைத்திருக்கிறதா இல்லையா? ஒரு எம்எல்ஏவாக இருப்பவருக்கு எப்படி எம்பி சீட் கொடுக்க முடியும்? ஏற்கனவே, கன்னியாகுமரி மாவட்டத்தில் எம்பி வேட்பாளர் இருக்கிறார். அரசியலில் ஆசை இருக்கலாம். பேராசை இருக்கக் கூடாது" என்றார்.
பொதுவாக காங்கிரஸில் கூட்டம் கூடுவதில்லை என்பது குறித்து கேட்டபோது, "இப்பொழுது வரவேற்பதற்கு நான் யாரையும் அழைக்கவில்லை. காங்கிரஸ் தலைவர் தலைமையில் மிகப்பெரிய கூட்டம் நடைபெற உள்ளது. அதுமட்டுமின்றி, இரவு நேரம் என்பதால், என்னை வரவேற்க குறைவானவர்கள் வந்துள்ளார்கள்" எனப் பேசினார்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பேருந்துகளிலும் தானியங்கி கதவுகள் பொருத்த உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு! - Install Automatic Doors In Buses