திருநெல்வேலி: பனங்காட்டுப்படை கட்சியின் முன்னாள் நிர்வாகியான ஹரி நாடார், கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தொகுதியில் போட்டியிட்டு 30 ஆயிரம் வாக்குகள் பெற்று அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.
மேலும், கழுத்து, கைகளில் கிலோ கணக்கில் நகை அணிந்து நடமாடும் நகைக்கடை போல் வலம் வந்தவர் ஹரி நாடார். இந்நிலையில், மோசடி வழக்கு ஒன்றில் சிக்கிய ஹரி நாடார், பெங்களூர் போலீசாரால் கைது செய்யப்பட்டு சுமார் 2 ஆண்டுகள் சிறையில் இருந்தார். சமீபத்தில் ஜாமீனில் வெளியே வந்த இவர், சமுதாய ரீதியாக பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வருகிறார்.
ஹரி நாடார் காரசார பேட்டி: இந்நிலையில், நெல்லை மாவட்டம் தாழையூத்தில் பேருந்தை சேதப்படுத்திய வழக்கில் ஹரி நாடார் இன்று நெல்லை மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜரானார். அதைத் தொடர்ந்து, நீதிமன்றத்திற்கு வெளியே அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது, “தூத்துக்குடி மாவட்டத்தில் விஏஓ ஒருவர் மணல் கொள்ளையர்களால் படுகொலை செய்யப்பட்டார். அந்த வழக்கை அரசு துரிதப்படுத்தி நான்கு மாதத்திற்குள் குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை வழங்கியது. ஆனால், சாத்தான்குளத்தில் அப்பாவி ஜெயராஜ், பெனிக்ஸ் படுகொலைக்கு இன்று வரை நீதி மறுக்கப்பட்டு வருகிறது.
சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை: அதிமுக ஆட்சியில் அந்த படுகொலை நடந்தாலும், அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின் இதற்கு நீதி வேண்டும் என்று குரல் கொடுத்தார். ஆனால், இன்று அவர்கள் ஆட்சியில் இருக்கிறார்கள். முதல்வர் மு.க.ஸ்டாலினால் சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கில் உடனடியாக தீர்ப்பு கிடைக்க நடவடிக்கை எடுக்க முடியும்.
ஜெயக்குமார் படுகொலை: வழக்கில் சிபிசிஐடி போலீசார் வழக்கு விசாரணையை நீதிமன்றத்தில் தாமதப்படுத்துகிறார்கள். எனவே, சாத்தான்குளம் சம்பவத்தில் தொடர்புடைய காவல்துறையினர் அனைவருக்கும் தூக்கு தண்டனையை மிக விரைவில் வழங்க வேண்டும். நெல்லை காங்கிரஸ் மாவட்ட தலைவராக இருந்த ஜெயக்குமார் படுகொலையில் விசாரணை இன்று வரை கண்துடைப்பாகவே இருக்கிறது, விசாரணை கிடப்பில் உள்ளது.
விசாரணையின் நிலை என்ன என்பதைக் கூட தெரியப்படுத்தவில்லை. ஏனென்றால், ஆளும் கட்சிக்கு கெட்ட பெயர் வந்துவிடும் என்ற பெயரால் அதை மூடி மறைக்கின்றனர். நாடார் சமுதாயம் சார்ந்து நடக்கும் இது போன்ற கொடூர படுகொலைக்கு திமுக அரசு நீதி வழங்க மறுக்கிறது. எனவே, சட்ட ரீதியாக நாங்கள் போராட்டங்களை முன்னெடுப்போம். கள் இறக்க அனுமதி கேட்டு நாங்கள் தொடர்ச்சியாக போராடி வருகிறோம்.
கள் விற்பனை: அண்டை மாநிலங்களான கேரளா, ஆந்திராவில் கள் விற்பனை செய்யப்படுகிறது. தமிழகத்தில் மட்டும் கள் விற்பனையை புறக்கணிக்கிறார்கள். கள் விற்பனைக்கு வந்தால் திமுக அமைச்சர்களின் மது ஆலைகளுக்கு விற்பனை குறைந்து விடும் என்பதால், திமுக அரசு அதை விற்பனைக்கு கொண்டு வர மறுக்கிறது.
கள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தால், கள்ளச்சாராயத்தை யாரும் காய்ச்ச மாட்டார்கள். யாரும் குடிக்கவும் மாட்டார்கள். கள்ளச்சாயம் விவகாரத்தில் தமிழக அரசு தலை குனிய வேண்டும் என்றும், திமுக தாமாக முன்வந்து எங்களால் ஆட்சியை நடத்த முடியவில்லை கலைத்து விடுகிறோம் என கூற வேண்டும், அப்படி கூறினால் தான் மக்கள் திமுகவை மன்னிப்பார்கள் என கூறினார்.
இதையும் படிங்க: கள்ளக்குறிச்சியில் கறார் காட்டிய குஷ்பூ.. 'மெத்தனால் இருந்த ஆதாரம் எங்கே'.. கேள்விகளை அடுக்கிய கமிஷன்!