தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம், திருவோணம் போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட நரங்கியம்பட்டு கிராமத்தில் போதைப் பொருட்களை சிலர் விற்பனைக்காக பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து, ஒரத்தநாடு கூடுதல் டிஎஸ்பி மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் சுதா சப் இன்ஸ்பெக்டர் விஷ்ணு பிரசாத் போலீஸ் குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை மேற்கொண்டனர்.
சோதனையில் அங்கு விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த சுமார் ரூ. 7 லட்சம் மதிப்பிலான 1,070 கிலோ குட்கா போதை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலும், இதில் தொடர்புடைய இரண்டு பேரை போலீசார் மடக்கி பிடித்தனர். இதைத்தொடர்ந்து கைப்பற்றப்பட்ட குட்கா போதைப் பொருட்களையும், பிடிபட்டவர்களையும் போலீசார் திருவோணம் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினர்.
இதையும் படிங்க: விஜய் முதல் அரசியல் கன்னிப் பேச்சு.. ஆர்.எஸ்.பாரதி முதல் ஆதவ் அர்ஜுனா வரை.. அரசியல் தலைவர்கள் கருத்து!
விசாரணையில், பிடிபட்டவர்களில் ஒருவர் புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி பகுதியை சேர்ந்த ரஹமத்துல்லா (49) என்றும், மற்றொருவர் திருவோணத்தை அடுத்துள்ள அதம்பை பகுதியை சேர்ந்த சுரேஷ் (43) என்றும் தெரிந்தது.
மேலும், இவர்கள் குட்கா போதைப் பொருட்களை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்ததும் தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து திருவோணம் போலீசார் ரஹமத்துல்லா, சுரேஷ் ஆகிய இருவரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து சரக்கு ஆட்டோவும் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், இந்த வழக்கு தொடர்புடைய திருவோணம் அருகே உள்ள திப்பன்விடுதியைச் சேர்ந்த முகமது அப்துல்லா என்பவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்