சென்னை: சென்னையில் இருந்து குஜராத் மாநிலம் அகமதாபாத் செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் தனியார் பயணிகள் விமானம், நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து புறப்படத் தயாரானது. அந்த விமானத்தில் பயணம் செய்ய வந்த பயணிகளின் உடமைகளை, சென்னை விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் பரிசோதித்து, பயணிகளை விமானத்திற்கு அனுப்பிக்கொண்டு இருந்தனர்.
அப்போது, அந்த விமானத்தில் வந்த அமெரிக்கா நாட்டைச் சேர்ந்த ஆண்ட்ரூ யர்ஷன் (40) என்பவரின் கைப்பையை பாதுகாப்பு அதிகாரிகள் ஸ்கேனிங் மிஷினில் வைத்து பரிசோதித்தனர். அப்போது, அந்தப் பைக்குள் அபாயகரமான பொருள் இருப்பதற்கான எச்சரிக்கை மணி ஒலித்தது. இதையடுத்து, பரபரப்படைந்த பாதுகாப்பு அதிகாரிகள், உடனடியாக அந்த கைப்பையை எடுத்து தனியே வைத்துவிட்டு, அமெரிக்க நாட்டுப் பயணி ஆண்ட்ரூ யர்ஷனிடம் விசாரித்தனர்.
அப்போது, அவர் கைப்பைக்குள் அபாயகரமான பொருள் ஏதும் இல்லை எனக் கூறியுள்ளார். ஆனால், பாதுகாப்பு அதிகாரிகள் கைப்பையை திறந்து பரிசோதித்த போது, அதனுள் பாயிண்ட் 223 ரகத்தைச் சேர்ந்த துப்பாக்கிக் குண்டு, லைவ்வாக வெடிக்கும் தன்மையில் இருந்தது. இதையடுத்து, துப்பாக்கிக் குண்டை பறிமுதல் செய்த பாதுகாப்பு அதிகாரிகள், அமெரிக்க பயணியின் அகமதாபாத் பயணத்தை ரத்து செய்தனர்.
அதோடு, அமெரிக்க பயணியிடம் பாதுகாப்பு அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தினர். அப்போது அவர், அமெரிக்காவில் வசிக்கும் தொழில் அதிபர் என்றும், தொழில் விஷயமாக இந்தியாவுக்கு வந்துள்ளதாகவும், இப்போது தான் சென்னையில் இருந்து அகமதாபாத்திற்கு சென்று கொண்டு இருப்பதாகவும் கூறினார்.
மேலும், தன்னிடம் சொந்த உபயோகத்திற்காக, தங்கள் நாட்டு லைசன்ஸ் உடன் கூடிய துப்பாக்கி இருப்பதாகவும், அந்த துப்பாக்கியில் பயன்படுத்தக்கூடிய ஒரு குண்டு, தவறுதலாக கைப்பையில் இருந்திருக்கிறது என்றும் இதே கைப்பையைத் தான், அமெரிக்காவில் இருந்து, தான் சென்னை வந்தபோது கொண்டு வந்ததாகவும், அப்போது அதை யாரும் பார்க்கவில்லை என்றும் கூறினார்.
ஆனாலும், பாதுகாப்பு அதிகாரிகள் அமெரிக்க பயணி ஆண்ட்ரூ யர்ஷனையும், அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட துப்பாக்கி குண்டையும், சென்னை விமான நிலைய போலீசில் ஒப்படைத்தனர். இதையடுத்து, சென்னை விமான நிலைய போலீசார், அமெரிக்க பயணியிடம் தொடர்ந்து விசாரணை நடத்தினர். அப்போது அமெரிக்க பயணி, தனது துப்பாக்கி லைசன்ஸ் மற்றும் தான் தொழில் விஷயமாக இந்தியா வந்துள்ளது போன்ற ஆவணங்கள் அனைத்தையும் காட்டினார்.
அதோடு தவறுதலாக கைப்பையில் இந்த குண்டு இருந்திருக்கிறது என்றும் கூறினார். இதையடுத்து, விமான நிலைய போலீசார் துப்பாக்கிக் குண்டை மட்டும் பறிமுதல் செய்தனர். அதன் பின்னர், அமெரிக்க பயணியிடம் இது சம்பந்தமாக விசாரணைக்கு தேவைப்பட்டால், வந்து ஆஜர் ஆகுவதாக எழுதி வாங்கிகொண்டு, அவரை நள்ளிரவில் அனுப்பி வைத்தனர்.
அதோடு, அவர் வேறு விமானத்தில் குஜராத் மாநிலம் அகமதாபாத் செல்வதற்கும் அனுமதித்தனர். இதற்கிடையே, சென்னை விமான நிலையத்தில் அமெரிக்க நாட்டுப் பயணி ஒருவரிடம், துப்பாக்கிக் குண்டு பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: திருமணத்தின்போது மின்சாரம் தாக்கி மணமகன் உயிரிழப்பு.. ராஜஸ்தானில் சோகம்! - Groom Dies In Rajasthan