தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே உள்ள பொம்மையாபுரத்தை சேர்ந்தவர் முத்து. ஆடு மேய்க்கும் தொழிலாளியான இவரது மகன் மகேந்திரன் (12) சிவஞானபுரம் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 7ம் வகுப்பு பயின்று வந்தார்.
இந்நிலையில், பள்ளி இடைவேளை நேரத்தின் போது சிறுநீர் கழிக்க சென்று விட்டு வரும்போது பள்ளி வளாகத்தில் பழுத்து கீழே விழுந்து கிடந்த நாவல் பழங்களை எடுத்து சாப்பிட்டுவிட்டு தண்ணீர் குடித்ததாக சொல்லப்படுகிறது. பின்னர் சக மாணவர்களுடன் வகுப்புக்குச் சென்ற மகேந்திரன் சிறிது நேரத்திலேயே மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது.
பின்னர் சக மாணவர்களுடன் வகுப்புக்குச் சென்ற மகேந்திரன் சிறிது நேரத்திலேயே மயங்கி விழுந்துள்ளான். இதையடுத்து ஆசிரியர்கள் உடனடியாக மாணவரை மீட்டு முதலுதவி சிகிச்சை அளிக்கும் போது மாணவர் வாந்தி எடுத்துள்ளார். இதைத்தொடர்ந்து தலைமையாசிரியர் மாயா உள்ளிட்ட ஆசிரியர்கள் உடனடியாக, எப்போதும் வென்றான் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் மாணவர் மகேந்திரன் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதையடுத்து மாணவர் மகேந்திரனின் சடலம் தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த் மாவட்ட கல்வி அலுவலர் கண்ணன் உள்ளிட்ட கல்வித்துறை அதிகாரிகள் பள்ளிக்கு வந்து ஆசிரியர்களிடம் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தினர்.
இதுகுறித்து போலீஸ் வட்டாரங்கள் கூறுகையில், மாணவர் மகேந்திரன் பள்ளி வளாகத்தில் இருந்த நாவல் பழங்களை எடுத்து சாப்பிட்டதால் மரணம் அடைந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து உடற்கூறு ஆய்வு அறிக்கை வந்த பிறகு தான் முழு விவரங்கள் தெரியவரும் என தெரிவித்துள்ளனர்.
காலையில் பள்ளிக்கு வந்த மாணவன் மகேந்திரன் திடீரென மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் விளாத்திகுளம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இச்சம்பவம் தொடர்பாக எப்போதும் வென்றான் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: போதைக்கு எதிரான விழிப்புணர்வு குறும்பட போட்டி;மதுரை மாநகர காவல் துறை அறிவிப்பு!