சென்னை: புனித வெள்ளியை முன்னிட்டு, கிளாம்பாக்கத்திலிருந்து தென்மாவட்டங்களின் பல்வேறு இடங்களுக்கு வருகிற மார்ச் 28ஆம் தேதி 505 பேருந்துகளும், 29ஆம் தேதி 300 பேருந்துகளும், 30ஆம் தேதி 345 பேருந்துகளும் இயக்கப்படும் என அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “மார்ச் 29 (வெள்ளி கிழமை) புனித வெள்ளி மற்றும் 30, 31 வார விடுமுறை நாட்களை முன்னிட்டு, சென்னையிலிருந்து இதர இடங்களுக்கும், பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழ்நாடு முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனை கருத்தில் கொண்டு, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, மார்ச் 28 (வியாழக் கிழமை), சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 505 பேருந்துகளும், மார்ச் 29 (வெள்ளிக்கிழமை) 300 பேருந்துகளும், மார்ச் 30 (சனிக்கிழமை) 345 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், கோயம்பேட்டிலிருந்து நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு மார்ச் 28, 29, 30 ஆகிய நாட்களில் கூடுதலாக 120 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதேபோல், பெங்களூர், திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கு 200 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதனையடுத்து, மார்ச் 31 (ஞாயிற்றுகிழமை) அன்று, சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது. விடுமுறை நாட்களை முன்னிட்டு, மார்ச் 28 (வியாழக்கிழமை) அன்று 13 ஆயிரத்து 622 பயணிகளும், வெள்ளிக்கிழமை 3 ஆயிரத்து 929 பயணிகளும், சனிக்கிழமை 2 ஆயிரத்து 367 பயணிகள் மற்றும் ஞாயிறு அன்று 12 ஆயிரத்து 500 பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர்.
இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால், தொலைதூரப் பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு, தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் Mobile App மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இச்சிறப்பு பேருந்து இயக்கத்தினைக் கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே, பயணிகள் மேற்கூறிய வசதியினை பயன்படுத்தி தங்களது பயணத்தினை மேற்கொள்ள வேண்டும்” இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தூத்துக்குடி மக்களவைத் தொகுதி; வேட்பு மனுத் தாக்கல் செய்தார் கனிமொழி! - Dmk Kanimozhi Filing Nomination