சென்னை: கோவாவில் கடந்த ஆகஸ்ட் 22ஆம் தேதியில் இருந்து 25ஆம் தேதி வரை 5வது சர்வதேச சிலம்பப் போட்டி நடைபெற்றது. இதில் இந்தியா, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, இந்தோனேசியா உட்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.
மூன்று நாட்கள் நடைபெற்ற இந்த போட்டியில் 10 வயதிற்கு உட்பட்டவர்கள் மற்றும் 10 வயதிற்கு மேற்பட்டவர்கள் என இரண்டு பிரிவுகளுக்கு கீழ் ஒற்றைக் கம்பு, இரட்டை கம்பு, சுருள், ஈட்டி, வாள் வீச்சு போன்றவற்றில் வீரர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.
இதில் கலந்துகொண்ட சென்னை மணலியைச் சேர்ந்த தனியார் பள்ளி குழுவினர், 15 தங்கம் மற்றும் 2 வெள்ளிப் பதக்கங்களைக் கைப்பற்றி தமிழகம் திரும்பினர். இவர்களுக்கு சென்னை விமான நிலையத்தில் அவர்களது உறவினர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பயிற்சியாளர் சரளா, “நமது மாணவ மாணவிகள் விளையாடிய அனைத்து போட்டிகளும் மிகவும் கடினமாக இருந்தது. ஆனாலும், வெற்றி பெற்று பதக்கங்களை வென்றுள்ளனர். இது மிகவும் பெருமையாக உள்ளது. தமிழ்நாடு அரசு இதுபோல் திறமையான நமது மாணவர்களை தொடர்ந்து ஊக்கம் அளிக்க வேண்டும்.
அவ்வாறு அரசு செய்தால் மட்டுமே திறமையான மாணவர்கள் அடுத்தடுத்த கட்டத்தை நோக்கிச் செல்ல முடியும். சிலம்பம் தமிழ்நாட்டின் பாரம்பரியக் கலை என்பதால் தொடர்ந்து பெற்றோர், ஆசிரியர்கள் ஆதரவளித்து வருகின்றனர். அதனால் தற்போது மாணவர்களும் இந்த விளையாட்டில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து பேசிய வெற்றி பெற்ற வீரர் ஒருவர்,"அனைத்து போட்டிகளும் மிக கடினமாக இருந்தது. ஆனாலும், நாங்கள் வெற்றி பெற்று உள்ளோம். எங்கள் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த பயிற்சியாளர்கள், பெற்றோருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இது போன்று சர்வதேச போட்டிகளில் நமது சிலம்பம் இருப்பது மிக மகிழ்ச்சியளிக்கிறது. இனி எதிர்வரும் போட்டிகளில் கலந்துகொள்ள ஆவலுடன் உள்ளேன்” எனத் தெரிவித்தார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: "சிலம்பம் கலையை பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கட்டாய பாடமாக்க வேண்டும்" - கராத்தே சங்கர் கோரிக்கை!