மதுரை: மதுரை அழகர்கோயில் சாலையில் உள்ள தனியார் விடுதியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தென் மண்டல அளவிலான ஆலோசனைக் கூட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது. இதில் அக்கட்சியின் மாநிலத் தலைவர் ஜி.கே.வாசன் தலைமையேற்றார்.
கூட்டத்திற்குப் பிறகு அவர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது, "2026 சட்டமன்றத் தேர்தலை கருத்தில் கொண்டு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன, தமிழகத்தில் உள்ள 50 சட்டமன்றத் தொகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்க்கொள்ள உள்ளேன்" எனக் கூறினார்.
நிதி ஆயோக் கூட்டம் மிக முக்கியமான கூட்டமாகும். இக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்ளாமல் கடமை தவறி உள்ளார். திமுக ஆட்சி அமைக்க மக்கள் தேர்ந்தெடுத்துள்ளனர். காரணம், அவர் மக்களின் எண்ணத்தை பிரதிபலிப்பார் என்பது தான்.
மேலும், சமூக வலைத்தளங்களில் முதலமைச்சர் பேசுவதை விட கூட்டத்தில் நேரடியாக பங்கேற்று இருக்க வேண்டும். அதேபோல், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி நொண்டி சாக்குகளைக் கூறி கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்து உள்ளார். திமுக உட்பட காங்கிரஸ் கூட்டணியில் இருக்கும் முதலமைச்சர்கள் கூட்டத்தை புறக்கணித்து விட்டனர்.
அவர்கள் தங்கள் மாநில மக்களின் நலனை மறந்துவிட்டனர். இன்று பீகாருக்கு நிதி ஒதுக்கீடு செய்த மத்திய அரசு, நாளை தமிழகத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யும். பாஜக ஆளும் மாநிலங்களுக்கு மட்டும் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்யவில்லை. மாற்றான் தாய் மனப்பான்மை இல்லாமல் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது" எனக் கூறினார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க: பட்ஜெட் விவகாரம்; மத்திய அரசைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ரயில் மறியல் போராட்டம்!