திருச்சி: தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில், திருச்சி தென்னுார் உழவர் சந்தை மைதானத்தில், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் காமராஜரின் 122வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தை தலைமை தாங்கி நடத்திய ஜி.கே.வாசன் பேசுகையில், “வருங்காலத்தில், தமிழகத்தில் அனைத்து துறைகளும் வளர்ச்சி பெற வேண்டும். தமிழகம், உண்மையிலேயே அமைதிப் பூங்காவாக விளங்க வேண்டும்.
பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம்.
— G.K.Vasan (@GK__Vasan) July 14, 2024
நாள் : 14 - 07 - 2024.
இடம் : உழவர் சந்தை மைதானம், திருச்சி.https://t.co/qm9DGivYMF
அதற்கு தேவை, காமராஜர் கடைபிடித்த நேர்மை, எளிமை, துாய்மை, வெளிப்படைத்தன்மை. இந்த தாரக மந்திரத்தை தான் தமிழக மக்கள் எதிர்பார்க்கின்றனர். அதன் அடிப்படையில் தமிழகத்தில் ஆட்சி அமையும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர். வரும் 2026ஆம் ஆண்டில் நடைபெறும் சட்டமன்றத் தேர்தலுக்கு வலு சேர்க்கும் வகையில் இந்த பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.
வருங்காலம் நல்ல காலம், வசந்த காலம் என்பதில் மாற்று கருத்து இருக்க முடியாது. மீண்டும் தமிழகத்தில் நல்லாட்சி ஏற்பட வேண்டும் என்று உறுதி ஏற்கும் வகையில், தேசிய ஜனநாயக கூட்டணி கட்சித் தலைவர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். காமராஜர் ஆட்சிக் காலத்தில் கல்வி, விவசாயம், சுகாதாரம், தொழில் என அனைத்திலும் தமிழகம், இந்தியாவின் முதல் மாநிலமாக திகழ்ந்தது.
தற்போது, தமிழகத்தில் விவசாயிகளின் நிலை கவலைக்கிடமாக இருக்கிறது. மருத்துவமனையில் கோமாவில் இருக்கும் நோயாளிகளைப் போல தமிழக விவசாயிகளின் நிலை உள்ளது. கர்நாடக அணைகளில் போதுமான தண்ணீர் இருந்தும், காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை மதிக்காமல், கர்நாடகாவில் உள்ள காங்கிரஸ் அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராக செயல்படும் கர்நாடக அரசை தட்டிக் கேட்காமல், தமிழக அரசு வாய் மூடி இருக்கிறது.
அரசியல் சாசனத்தை முன்வைத்து அரசியல் செய்து கொண்டிருப்பதாக தம்பட்டம் அடித்துக் கொள்ளும் காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை, கர்நாடகாவில் அரசியல் சாசனத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட நீதிமன்ற தீர்ப்பை மதிக்காமல் செயல்படுகின்றனர். மக்களை ஏமாற்றுவதற்காக அரசியல் நாடகம் நடத்துகின்றனர். மக்கள் வாழ்வாதாரத்தில் கை வைக்க பார்க்கின்றனர். காவிரி பிரச்னை, நம்முடைய உயிர் பிரச்னை. காவிரி தண்ணீரைப் பெறுவதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகளில் இருந்து திமுக அரசு தவறுகிறது. வெந்த புண்ணில் வேல் பாய்ச்சிக் கொண்டிருக்கிறது.
விவசாயிகள் உங்களைக் கூர்ந்து கவனித்துக் கொண்டிருக்கின்றனர். இனி எந்த காலத்திலும் தமிழக விவசாயிகள் உங்களை மன்னிக்க தயாராக இல்லை. அண்டை மாநிலங்களுடனான நதிநீர் பிரச்னைகளில், கூட்டணி அரசியலுக்காக, ஓட்டுக்காக திமுக அரசு விவசாயிகளுக்கு துரோகம் செய்கிறது. கொலை, கொள்ளை, போதைப்பொருள் புழக்கம், கள்ளச்சாராயம், விஷச்சாராயம் போன்ற சட்டம் ஒழுங்கு பிரச்னைகளில் தமிழகம் முன்னேறிக் கொண்டிருப்பது தான் திராவிட மாடலின் அடையாளம்.
கள்ளக்குறிச்சி மரணம், அரசியல் தலைவர்கள் மரணம், போதைப் பொருட்களால் மரணம், டாஸ்மாக் மரணங்கள் நிகழும் போது திமுக ஆட்சி செய்தது போதாதா ? உங்கள் ஆட்சியில் மக்கள் மாண்டது போதாதா? என்று கேட்கிறோம். தமிழகத்தில் மீண்டும் நல்லாட்சி அமைய வேண்டும். காமராஜர் எண்ணங்களை பிரதிபலிக்க வேண்டும். அதற்கு ஒன்றுபடுவோம், செயல்படுவோம், வெற்றி பெறுவோம் என்று உறுதியேற்போம்” என பேசினார்.
இதையும் படிங்க: தமிழகத்திற்கு காவிரி நீரை திறக்க கர்நாடகா மறுக்க என்ன காரணம்? விளக்கமும்... விவகாரமும்..