கோயம்புத்தூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் 'என் மண் என் மக்கள்' நடைபயணத்தின் நிறைவு விழா மற்றும் பொதுக்கூட்டம் இன்று (பிப்.27) நடைபெறுகிறது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு, பாஜக தொண்டர்கள் மத்தியிலும், பொதுமக்கள் மத்தியிலும் உரையாற்ற உள்ளார்.
அந்த வகையில், இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் விமானம் மூலம் கோவை வந்தடைந்தார். அப்போது, கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "பிரதமர் மோடி கலந்துகொள்ளும் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக வந்த என்னை தமாகா தொண்டர்கள் திரளாக வரவேற்றனர்.
பிரதமரின் பொதுக்கூட்டத்தில், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள். வருங்கால இந்தியா உயர்ந்த இந்தியாவாக, மதிப்பிற்குரிய இந்தியாவாக, வளமான இந்தியாவாக பிரதமர் மோடி தலைமையில் அமையும். 10 ஆண்டுகால மத்திய மோடி அரசின் மக்கள் பணிகளும், மக்கள் திட்டங்களும், சாதனைகளுமே, பாஜக இந்த தேர்தலில் வெற்றி பெறும் என்பதற்கான சான்று.
தமிழகத்திலிருந்து பாஜக கூட்டணிக்கு நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்கக்கூடிய உயர்ந்த நிலையை தமிழக வாக்காளர்கள் இந்த முறை ஏற்படுத்துவார்கள் என்று முழுமையாக நம்புகிறோம். அதற்கு ஏற்றவாறு எங்கள் களப்பணி அமையும்" எனத் தெரிவித்தார். இதையடுத்து, பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காகச் சாலை மார்க்கமாக பல்லடம் புறப்பட்டார்.
இதையும் படிங்க: “பாஜக எந்தக் கட்சியையும் உடைக்கவில்லை; பிற கட்சியினர் தாமாக ஆதரவு அளிக்கின்றனர்” - எல்.முருகன்