சென்னை: வாக்கு எண்ணும் நாளில் எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இன்று (ஏப்.29) வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைத்துள்ள ராணி மேரி கல்லூரியில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட தேர்தல் அலுவலர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
வடசென்னை நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைத்துள்ள ராணி மேரி கல்லூரியில் மாவட்ட தேர்தல் அலுவலர் ராதாகிருஷ்ணன், சென்னை காவல் ஆணையர் சந்திப் ராய் ரத்தோர், வட சென்னை தேர்தல் பொறுப்பாளர் ரவி தேஜா உள்ளிட்டோர் இன்று ஆய்வு மேற்கொண்டனர்.
தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த ராதாகிருஷ்ணன், “வாக்கு எண்ணும் மையங்களை இன்று ஆணையருடன் இணைந்து மாவட்ட தேர்தல் அலுவலராகக் கூட்டாக ஆய்வு செய்தோம். யாராக இருந்தாலும் வாக்குப் பதிவு இயந்திரங்கள் இருக்கும் இடத்திற்குள் செல்ல முடியாது.
சென்னை மாவட்டத்திற்கு உட்பட்ட மூன்று தொகுதி வாக்கு எண்ணும் மையத்திலும், சட்டமன்றத் தொகுதி வாரியாக வாக்கு எண்ணுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 14 மேசைகள் அமைத்து வாக்கு எண்ணவும், 16 கேமராக்கள் பாதுகாப்பிற்காக வாக்கு எண்ணும் மையத்திற்கு உள்ளும் அமைக்க ஏற்பாடு செய்யப்படவுள்ளது.
கண்காணிப்பு கேமராக்கள் முறையான இடங்களில் வைக்கப்பட்டுள்ளதா என்பதனை ஆய்வு செய்தோம். வடசென்னை தொகுதி வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைத்துள்ள பாதுகாப்பு அறைகளைக் கண்காணிக்க 104 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.
சிசிடிவி கேமிராக்கள் தொடர்ந்து இயங்குவதை உறுதி செய்யத் தடையில்லா மின்சாரம் விநியோகம் உறுதி செய்யப்பட்டுள்ளது. கூடுதலாக ஜெனரேட்டர் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. வாக்கு எண்ணும் நாளில் எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது", என கூறியுள்ளார்.
தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த சென்னை பெருநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் பேசுகையில், “வாக்கு பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள மையங்களுக்கு 4 அடுக்கு பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது. சுழற்சி முறையில் ஒரு பணி நேரத்தில் 140 அதிகாரிகள் காவல் இருக்கின்றனர். பாதுகாப்பு ஏற்பாடுகள் தினமும் சரியாக இருக்கிறதா என்பதனை தினமும் எங்களுக்கு ஆய்வு செய்து அறிக்கை கொடுக்கப்படுகிறது. நாங்கள் ஆய்வு செய்து அறிக்கையைத் தேர்தல் ஆணையத்திற்குக் கொடுப்போம்”, என கூறியுள்ளார்.