சென்னை: கர்நாடக மாநிலம், மைசூரில் இருந்து சென்னை பெரம்பூர் வழியாக பீகார் மாநிலம் தர்பாங்கா நோக்கி சென்று கொண்டிருந்த பாக்மதி எக்ஸ்பிரஸ் ரயில் (12578) இன்றிரவு 8.30 மணி அளவில் திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த கவரப்பேட்டையில் நின்றிருந்த சரக்கு ரயில் மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது.
விபத்து எப்படி நடந்தது?: இந்த நிலையில் எவ்வாறு விபத்து நடந்தது என்பது குறித்து தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து பேட்டியளித்துள்ள தெற்கு ரயில்வே செய்தி தொடர்பாளர், "பாக்மதி எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று இரவு 8.27க்கு மெயின் லைன் வழியாக பொன்னேரி ரயில் நிலையத்தை கடந்தது. பொன்னேரியில் இருந்து கவரப்பட்டே ரயில் நிலையத்தின் வழியே சென்றபோது ரயில் பெட்டிகள் ஆட்டம் கண்டதை பயணிகள் உணர்ந்தனர்.
பொன்னேரி ரயில் நிலையத்தை கடந்து மெயின் லைனில் சென்று கொண்டிருந்த ரயில் கவரப்பேட்டை ரயில் நிலையத்தில் நுழையும்போது மெயின் லைனில் சிக்னல் கொடுக்கப்பட்டபோதும், லூப் லைனில் மாறி 75 கிலோ மீட்டர் வேகத்தில் பயணித்தது. இதனால் அப்போது லூப் லைனில் நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது அதிபயங்கர வேகத்தில் மோதியது," என்று கூறினார்.
ஒடிசா மாநிலம் பாலசோரில் நடந்தது போன்ற விபத்து: ஒடிசா மாநிலம் பாலசோரில் கடந்த 2023ஆம் ஆண்டு ஜூன் 2 ஆம் தேதி இரவு ஷாலிமர்-சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலும் மெயின் லைனில் சிக்னல் கொடுத்தும் லூப் லைனில் சென்றதாலேயே அங்கு ஏற்கனவே நின்றிருந்த ரயில் மீது மோதி விபத்துக்குள்ளானது.
மெயின் லைனில் செல்வதற்கு பஹனகா பஜார் ரயில் நிலையத்தில் பச்சை சிக்னல் கொடுக்கப்பட்டபோது ஷாலிமர்-சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலின் ஓட்டுநர் அதனை கவனிக்காமல் லூப் லைனில் சென்றார். இதனால், 130 கிலோ மீட்டர் வேகத்தில் சென்ற ரயில் அங்கு நிறுத்தப்பட்டிருந்த சரக்கு ரயிலில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் ரயில் பெட்டிகள் கவிழ்ந்ததில் 290 பேர் உயிரிழந்தனர். 900த்துக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இந்திய ரயில் விபத்து வரலாற்றில் மிகப்பெரிய கோர விபத்தாக இது பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: பாக்மதி எக்ஸ்பிரஸ் ரயில் விபத்து: விபத்து குறித்து விசாரணை நடத்த 6 பேர் கொண்ட உயர்மட்டக் குழு அமைப்பு...
இரண்டு விபத்துகளும் ஒரே மாதிரியானவையா?: கவரப்பேட்டையில் பாக்மதி எக்ஸ்பிரஸ் ரயில்-சரக்கு ரயிலில் மோதி விபத்துக்குள்ளானதற்கு அந்த ரயில் மெயின் லைனில் சிக்னல் கொடுக்கப்பட்டும், லூப் லைனில் சென்றதுதான் விபத்துக்கு காரணம் என்று கூறப்படுகிறது. பாலாசோரில் கடந்த 2023ஆண்டு ஜூன் 2ஆம் தேதி நடந்த ஷாலிமர்-னென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலும் மெயின் லைனில் சிக்னல் இருந்தும் லூப் லைனில் சென்றதே விபத்து காரணம் என்று தெரியவந்தது. எனவே இரண்டு ரயில் விபத்துகளும் ஒரே மாதிரியான தன்மையில் நடந்திருப்பவை என்பது தெரியவருவதாக ரயில்வே அதிகாரிகள் கூறுகின்றனர்.
ஒரே ஒரு வித்தியாசம்: பாலசோர் ரயில் விபத்தும், கவரப்பேட்டை அருகே நடந்த ரயில் விபத்தும், விபத்து நடந்த தன்மையில் ஒரே மாதிரியாக இருந்தபோதும் அதனால் நேரிட்ட சேதத்தில் ஒப்பீடு செய்ய முடியாது. பாலாசோர் ரயில் விபத்தில் 290 பேர் உயிரிழந்தனர். ஆனால், கவரப்பேட்டை ரயில் விபத்தில் சிலர் மட்டுமே காயமுற்றனர். அதற்கு ரயிலின் வேகம் காரணமாக இருக்கலாம் என்று தெரிகிறது. ஷாலிமர்-கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்து நடக்கும்போது 130 கிலோ மீட்டர் வேகத்தில் சென்றது. ஆனால், பாக்மதி எக்ஸ்பிரஸ் ரயில் 75 கிலோ மீட்டர் வேகத்தில் சென்றதால் சேதத்தின் தன்மை குறைவு என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்