சென்னை: வடகிழக்கு பருவமழையின் போது சென்னையின் வேளச்சேரி, அடையாறு, பள்ளிக்கரணை உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவு பாதிப்பு ஏற்படுகின்றது. ஆகவே அந்த பகுதிகளில் தேங்கும் மழைநீர் வடிவதற்கு அதிக நாட்களாவதால் பொதுமக்கள் பாதிப்படைகின்றனர்.
இதனை தடுக்கும் விதமாக, சென்னை மாநகராட்சி சார்பில் சமீபத்தில் கையகப்படுத்தப்பட்ட 168 ஏக்கர் பரப்பளவு கொண்ட கிண்டி ரேஸ்கோர்ஸில் நான்கு குளங்களை அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 300 அடி அகலமும் 100 அடி நீளமும், 22 அடி ஆழமும் கொண்ட 4 குளங்களில் 9 கோடியே 80 லட்சம் லிட்டர் நீரை சேமிக்க முடியும் என்றும், இதில் அமைக்கப்படும் நான்கு குளங்களும் ஒன்றோடு ஒன்று இணைப்பில் உள்ள வகையில் அமைக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சென்னை மாநகராட்சி துணை மேயர் மகேஷ் குமார் ஈடிவி பாரத்திற்கு அளித்த சிறப்பு பேட்டியில், "சென்னை மாநகராட்சி முழுவதும் உள்ள 15 மண்டலங்களில் 55 குளங்கள் கண்டறியப்பட்டு குளங்களை அகலப்படுத்தி பராமரிப்பு பணி நடைபெற்று வருகிறது.
பாண்ட் பார்க்: இதன் அடிப்படையில், சென்னை மாநகராட்சியில் உள்ள குளங்கள் புனரமைக்கப்பட்டு பாண்ட் பார்க் (pond park) என்ற திட்டத்தை மையப்படுத்தியும், குடியிருப்பு பகுதிகளில் இருக்கும் மழைநீர் குளத்தில் சென்றடைவதற்காகவும் குளங்கள் பராமரிக்கப்பட்டு வருகிறது. மேலும், குளங்களில் சென்றடையும் மழைநீரை சேமிப்பதால் நிலத்தடிநீரும் உயருவதற்கான வாய்ப்பும் அதிகம் உள்ளது.
கிண்டி ரேஸ் கோர்ஸ்: குறிப்பாக, கிண்டி மற்றும் வேளச்சேரி பகுதிகளில் பருவமழையின் போது குடியிருப்பு பகுதிகளில் அதிக அளவு தண்ணீர் தேங்கக்கூடிய நிலையை தவிர்க்கும் விதமாக, நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், கிண்டி ரேஸ் கோர்ஸ் இடத்தை சென்னை மாநகராட்சி கையகப்படுத்தி, அதில் மூன்று குளங்கள் ஏற்கனவே அமைக்கப்பட்டு அங்குள்ள கோல்ப் மைதானத்திற்கு பராமரிப்பு பணிக்காக பயன்படுத்தி வந்திருந்தனர்.
இதையும் படிங்க: 'மழைநீர் தேங்காமலிருக்க நடவடிக்கை எடுக்க முடியலையா? அப்போ மருத்துவமனையை இழுத்து மூடுங்க' - ஐகோர்ட் காட்டம்!
ஐந்து பர்லாங் சாலை: மழை காலங்களில் அந்த குளங்கள் நிறைந்து தண்ணீர் வழிந்தோடும் நிலையில், அந்த தண்ணீரை மாநகராட்சி கால்வாய்களில் விடக்கூடிய சூழல் ஏற்பட்டதனால், கிண்டி ரேஸ் கோர்ஸ் பகுதியை சுற்றி இருக்கக்கூடிய குடியிருப்பு பகுதிகளில் நீர் சென்றடையும் சூழல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக கிண்டி ரேஸ் கோர்ஸ் குளங்களிலிருந்து வெளியேற்றப்பட்ட நீர் ஐந்து பர்லாங் சாலை பகுதியில் புகுந்ததால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
நான்கு குளங்கள்: இந்த வருடமும் அதேபோல எந்த பிரச்சினையும் ஏற்படாமல் இருப்பதற்காக 168 ஏக்கர் பரப்பளவு கொண்ட கிண்டி ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் நான்கு குளங்கள் சென்னை மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்டு வருகிறது. 9.80 கோடி லிட்டர் கொள்ளளவு கொண்ட குளமாக இவை அமைக்கப்படுகிறது. இந்த குளங்கள் அமைக்கும் பணியானது இன்னும் பத்து அல்லது பதினைந்து நாட்களில் முழுமை அடையும். மேலும், 4 குளங்களும் ஒன்றோடு ஒன்று இணைப்புடன் இருக்கும் வகையில் அமைக்கப்பட்டிருக்கிறது.
கையகப்படுத்தப்பட்ட நீர்நிலைகள்: இதுமட்டும் அல்லாது, ஓட்டேரி கால்வாய், விருகம்பாக்கம் கெனால், வீராங்கல் ஓடை உள்ளிட்டவை நீர் வள ஆதாரத்துறையிடம் இருந்ததை சென்னை மாநகராட்சி கையகப்படுத்தி அவற்றை பராமரிப்பு பணி செய்து வருகிறது. 118 ஏக்கரில் முதலமைச்சர் அறிவித்துள்ள பசுமை பூங்காவில் இவை அனைத்தும் செயல்படுத்தப்பட உள்ளது" என்று தெரிவித்தார்.
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்