சென்னை: காலஷேத்ரா நடனப் பள்ளியின் முன்னாள் பேராசிரியர் ஷீஜித் கிருஷ்ணா, பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக வெளிநாட்டில் வசிக்கும் முன்னாள் மாணவி ஒருவர் புகார் அளித்துள்ளார். இந்தப் புகார் குறித்த தீவிர விசாரணைக்குப் பின், முன்னாள் பேராசிரியர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளாது.
சென்னை திருவான்மியூர் பகுதியில் இயங்கி வரும் கலாஷேத்ரா நடனப் பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு நான்கு பேராசிரியர்கள் பாலியல் தொல்லை தருவதாகக் கூறி, அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவிகள் தொடர் போராட்டம் நடத்தி வந்தனர்.
இதையடுத்து, இச்சம்பவம் தொடர்பாக புகார் அளிக்கப்பட்டு, போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு, பேராசிரியர் ஹரி பத்மநாதன் என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதையடுத்து, அவருக்கு கடந்த ஆண்டு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது.
தொடர்ந்து இச்சம்பவம் தொடர்பான உண்மைத் தன்மையை அறிய, கலாஷேத்ரா நிர்வாகம் சார்பில் ஓய்வு பெற்ற நீதிபதி கண்ணன் தலைமையில் குழு அமைக்கப்பட்டு, தீவிர விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், நீதிமன்றத்திலும் இது தொடர்பாக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், காலஷேத்ரா நடனப் பள்ளியின் 1995 - 2007 அறக்கட்டளையின் முன்னாள் பேராசிரியர் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக, வெளிநாட்டில் வசிக்கும் முன்னாள் மாணவி ஒருவர் புகார் அளித்துள்ளார். இந்தப் புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்த, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதன் அடிப்படையில், கடந்த பிப்ரவரி மாதம் நீலாங்கரை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
மேலும், இந்த வழக்கு தொடர்பாக புகார் அளிக்கப்பட்ட முன்னாள் மாணவியிடம் வீடியோ கான்பிரன்ஸ் மூலம் போலீசார் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில், முன்னாள் பேராசிரியர் பாலியல் துன்புறுத்தல் கொடுத்தது தெரிய வந்துள்ளது. மேலும், நீலாங்கரை அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான குழுவினர், நேற்று முன்தினம் சென்னை கிழக்கு கடற்கரை சாலை முட்டுக்காடு பகுதியில் வசித்து வரும் கலாஷேத்ரா முன்னாள் பேராசிரியர் ஷீஜித் கிருஷ்ணா (51) என்பவரை கைது செய்து, காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
இந்த விசாரணையில் முன்னாள் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததை ஷீஜித் கிருஷ்ணா ஒப்புக்கொண்டதையடுத்து, அவர் மீது வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.