சென்னை: "தமிழகம் மீட்போம், தளராது உழைப்போம்" என்ற தலைப்பில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், பாஜக மாநில துணை தலைவர்கள் கரு நாகராஜன், நாராயணன் திருப்பதி, வி.பி துரைசாமி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் விஜயதாரணி உள்ளிட்ட பாஜக முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
அப்போது பொதுக்கூட்ட மேடையில் பேசிய பாஜக பிரமுகர் விஜயதாரணி, "பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, இந்திய அளவில் தமிழக பாஜகவை அறிமுகப்படுத்தி உள்ளார். தமிழகத்தில் பாஜக எங்கே என்று கேள்வி கேட்டவர்களுக்கு பாஜக முன்னாள், இந்நாள் தலைவர்கள் சரியான முறையில் பதில் அளித்துள்ளார்கள். பிரதமர் மோடியின் செயல்பாடுகள் தேசிய அளவில் பிரமிக்க வைத்துள்ளது.
உலக நாடுகளின் போர்களைச் சமாதானப்படுத்தும் இடத்தில் மோடி உள்ளார். பொருளாதார ரீதியாக நடுத்தர மக்களும், பயன்படும் வகையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை வழங்கியுள்ளார். நடுத்தர மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் பட்ஜெட்டாக மத்திய பட்ஜெட் அமைந்துள்ளது.
நான் 3 முறை சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, இரண்டரை ஆண்டுகாலம் பதவி இருந்தும், இருக்கின்ற பதவியையும் விட்டுவிட்டு பாஜகவில் இணைந்துள்ளேன். அதற்காக எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் வரவில்லை, எதிர்பார்ப்போடுதான் வந்துள்ளேன். எல்லாருமே அப்படி நினைத்திருந்தால் அவை தவறு. நன்றாக உழைத்து கட்சியை அடுத்த கட்டத்துக் கொண்டு போக வேண்டும் என்றால் பதவி வேண்டும்.
தற்போது காங்கிரஸிலிருந்து விலகி பாஜகவில் சேர்ந்து 6 மாதமாகி விட்டது. இன்னும் பதவி கொடுக்கவில்லை. எனக்கு நல்லது பண்ணுவீங்க எனத் தெரியும். என்னைப் போன்றவர்களை பாஜக நிச்சயம் பயன்படுத்தும். என்ன அண்ணே சரிதானே..? என அண்ணாமலையைப் பார்த்துக் கேட்டார் விஜயதாரணி.
உங்களைப் போல தியாகம் செய்துவிட்டு கட்சிக்கு வந்தவர் யாரும் கிடையாது என அண்ணாமலை என்னைப் பார்த்துக் கூறுவார். மேலும், உங்களுக்கு உண்டான அங்கீகாரம் கட்சியில் நிச்சயமாக வரும் எனவும் தெரிவிப்பார். பாஜக நிச்சயமாக என்னை சரியாகப் பயன்படுத்துவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. கட்சிப் பணி, தேசப்பணி ஆற்றுவதில் என்னைப் போன்ற பெண்களை அதிகமாக ஈடுபடுத்த வேண்டும்.
ஆனால், காங்கிரஸ் கட்சியில் இந்த தவற்றைச் செய்தார்கள். கேட்டால், பெண்களுக்கு எந்த தலைமையும் கிடையாது, பெண்களுக்கென்று எந்த பதவியும் கிடையாது. பெண்களுக்கு தலைமை பண்பு இல்லை எனக் காங்கிரஸ் கட்சியில் கூறுவார்கள். அப்படிப்பட்ட கட்சியில் தான் எதற்கு இருக்க வேண்டும் என்பதற்காக நான் விலகினேன். ஏனென்றால், தமிழிசையைத் தலைவராகவும், நிர்மலா சீதாராமனை மத்திய அமைச்சராகவும் ஆக்கினார்கள். ஒரு பெண்ணை நம்பிக் கொடுத்தார்கள். கூட்டணிக் கட்சியின் முதுகில் நின்று சவாரிக்கும் கட்சி தான் காங்கிரஸ் கட்சி" இவ்வாறு பேசினார்
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க: அவ்வளவு மோசமானவரா ஹர்திக் பாண்டியா? நடாஷாவுடனான விவகாரத்தின் அதிரும் பின்னணி!