சென்னை: தஞ்சையில் அதிமுக செயல் வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட செயலாளர் சேகர் தலைமையில் நேற்று (அக்.13) நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் வளர்மதி கலந்துகொண்டு பேசினார்.
அப்போது அவர், "தற்போதைய அரசு கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தால் பத்து லட்சம், ராணுவத்தில் உயிரிழந்தால் வெறும் இரண்டு லட்சம் மூன்று லட்சம் தான்.. மெரினாவில் உயிரிழந்தவர்களுக்கு ஐந்து லட்சம் என அறிவித்திருக்கிறார்கள்" என்றார்.
மேலும், "முதல்வரோ நேரில் சென்று கூட அவர்களது குடும்பத்தை பார்த்து ஆறுதல் கூறவில்லை. ஆனால், முதல்வரின் குடும்பமே அமர்ந்து கொண்டு விமான கண்காட்சியை பார்த்தது. தமிழகத்தில் குறுநில மன்னர்களைப் போல ஆட்சி செய்து வருகிறார்கள். இந்த நிலை மாற வேண்டும் என்றால் நாம் ஒற்றுமையாக உழைக்க வேண்டும்" என கூறினார்.
இதையும் படிங்க: 'ஆதிதிராவிடர் நலத் துறை செயல்படுகிறதா'? ஈபிஎஸ் குற்றச்சாட்டுகளுக்கு அமைச்சர் மதிவேந்தன் விளக்கம்..!
தொடர்ந்து பேசியவர், "பெண்கள் ஏமாந்து விடக்கூடாது.. அப்போதைய முதல்வர் ஜெயலலிதா பெண்கள் முன்னேற்றத்திற்காக தாலிக்கு தங்கம், மகளிருக்கு மானியத்துடன் கூடிய இரு சக்கர வாகனம், அனைத்து மகளிர் காவல் நிலையம் என பெண்கள் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை வழங்கினார்.
ஆனால், திமுக ஆட்சி வந்த உடன் அந்த திட்டங்கள் ஒவ்வொன்றாக நிறுத்தப்பட்டது. எனவே, திட்டத்தைப் பற்றி பெண்கள் அனைத்து குடும்பங்களுக்கும் எடுத்துச் சென்று தேர்தலில் உழைக்க பாடுபட வேண்டும்" என பேசினார்.
இக்கூட்டத்தில் முன்னாள் மேயர் சாவித்திரி கோபால், மாநகர செயலாளர் சரவணன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்