ஈரோடு: நம் நாட்டின் தேசிய விலங்காக புலி கருதப்படுகிறது. அதுமட்டுமின்றி, உலகிலேயே 80 சதவீதம் புலிகள் இந்தியாவில் தான் உள்ளது. இந்த நிலையில், புலிகளின் பாதுகாப்பு மற்றும் அவைகள் எதிர்கொள்ளும் அவசர அச்சுறுத்தல்களான வாழ்விட இழப்பு, வேட்டையாடுதல், மனித - வனவிலங்கு மோதல்கள் ஆகியவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்தில் இன்று நாடு முழுவதும் சர்வதேச புலிகள் தினம் கொண்டாடப்படுகிறது.
புலிகளின் புகலிடமாக விளங்குகிறது சத்தியமங்கலம் புலிகள் காப்பகம். ஏனென்றால், தென்னிந்தியாவில் உள்ள புலிகள் காப்பகத்தில் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் சுமார் 1,455 கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது. 2006ஆம் ஆண்டுகளில் புலிகளின் கால்தடம் பார்ப்பது அரிதாக இருந்தது. பின்னர், 2013ஆம் ஆண்டு மெல்ல மெல்ல புலிகளின் எண்ணிக்கை 22ஆக உயர்ந்தது.
அதனைத் தொடர்ந்து, புலிகளைப் பாதுகாக்க தனிப்படை அமைக்கப்பட்டு கண்காணித்தல், கணினி மயமாக்கப்பட்ட ரோந்து, புலி வேட்டையாடுதலுக்கு தடை உள்ளிட்ட தடுப்பு நடவடிக்கைகளால் தமிழ்நாட்டில் புலிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக, கிழக்கு மேற்குத் தொடர்ச்சி மலைகளில் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட தலமலை, பெஜலட்டி, தெங்குமரஹாடா, கேர்மாளம் ஆகிய வனப்பகுதியில், மனித இடையூறு இல்லாத நீர் நிலைகள் கொண்ட அடர்ந்த காட்டுப்பகுதியில் புலிகள் வசிப்பதாகக் கூறப்படுகிறது.
மேலும், அதிக பரப்பளவு கொண்ட இந்த புலிகள் காப்பகத்தில் சுமார் 150 புலிகள் வாழ்வதற்கு ஏற்ற சூழல் உள்ளதாகவும், தற்போது 95 புலிகள் உள்ளதாகவும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். ஆனால், புலிகளிடையே ஏற்பட்ட மோதல் காரணமாகவும், குட்டிகள் ஆற்றில் தவறி விழுவது, கால்நடைகளை புலிகள் வேட்டையாடும்போது இறந்த மாட்டில் விஷம் வைத்து அதில் சாப்பிடும் புலிகள் பலியாவது போன்ற காரணங்களால் புலிகள் உயிரிழக்கின்றன. இருப்பினும், சமீபத்தில் புலிகளின் இறப்பு விகிதம் குறைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
தற்போது, உலகளாவிய நிதி நிலையத்துடன் கேமரா வைத்தும் புலிகள் எண்ணிக்கையை வனத்துறை கணித்து வருகின்றனர். சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தையொட்டி பந்திப்பூர், முதுமலை, வயநாடு மற்றும் நாகர்கேலே போன்ற புலிகள் காப்பகங்கள் உள்ளதால், புலிகள் எளிதாக இடம்பெயர்ந்து இனப்பெருக்கத்தை ஏற்படுத்துவதால், சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் புலிகள் எண்ணிக்கை தற்போது 95 ஆக உயர்ந்துள்ளது என அண்மையில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.
புலிகளை பாதுகாப்பதன் அவசியம் என்ன? என்பது குறித்து தாளவாடி வனச்சரக அலுவலர் சதீஷ் அளித்த விளக்கம், "காட்டில் புலிகள் இல்லையென்றால், தாவரங்கள் அதிகமாகிவிடும், மான்கள் அதிகமாகிவிடும். மான்கள் அதிகமாகிவிட்டால், பெரிய மரங்களாக உருவாகும் செடிகளை மான்கள் அளித்துவிடும். அதனைத் தொடர்ந்து காடுகளே உருவாகது.
ஆகையால், தற்போது புலிகள் உள்ளதால்தான் செடிகள் மரங்களாக உருவாகிறது. மரங்களால் தான் மழை வருகிறது. மழையால் ஆறுகள் உருவாகிறது. ஆகையால், மனித குலம் சிறப்பாக இருக்க வேண்டும் என்றால், காடுகளில் புலிகள் இருக்க வேண்டும். ஆகவே நமது தேசிய விலங்கை பாதுகாக்க வனத்துறையோடு மக்களும் இணைந்து செயல்பட வேண்டும்" என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்