கோயம்புத்தூர்: கோயம்புத்தூர் மாவட்டம், வால்பாறை பகுதியில் கடந்த 2021ஆம் ஆண்டு தேயிலைத் தோட்டத்தில் காயங்களுடன் இருந்த எட்டு மாத புலிக்குட்டியை வனத்துறையினர் மீட்டனர். முள்ளம்பன்றியின் முட்களால் உடல் முழுவதும் காயமடைந்து இருந்த புலிக்குட்டிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, மானாம்பள்ளி பகுதியில் உள்ள கூண்டில் அடைத்து பராமரிக்கப்பட்டது.
பின்னர், புலிக்குட்டியை மந்திரி மட்டம் வனப்பகுதியில் 10,000 சதுர அடி கொண்ட கூண்டிற்கு மாற்றப்பட்டு இயற்கை சூழலில் வளர்க்கப்பட்டது. மேலும், இதற்கு வேட்டையாட பயிற்சிகளும் தொடர்ச்சியாக அளிக்கப்பட்டு வந்தன. புலிக்குட்டி இருக்கும் இந்த கூண்டில் முயல், மான் போன்ற விலங்குகள் விடப்பட்டு வேட்டையாட பயிற்சியும் அளிக்கப்பட்டது.
இந்நிலையில், T56 ரக புலி குட்டியால் வனத்தின் சூழலுக்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொள்ள முடியுமா என்பது குறித்து ஆராய ஒரு கமிட்டி அமைக்கப்பட்டது. இதுகுறித்து ஆய்வு மேற்கொண்ட குழுவினர், புலிக்குட்டியால் வனப்பகுதியில் வளர இயலாது என பரிந்துரைத்தனர்.
தற்போது அந்த புலிக்குட்டியை சென்னை வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிற்கு மாற்றுவதற்கு கமிட்டி பரிந்துரைத்துள்ள நிலையில், இதற்கான ஏற்பாடுகளை வனத்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். புலிக்குட்டி மீண்டும் வனப்பகுதிக்குள் இருக்க பயிற்சி அளிக்க சுமார் ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமாக வனத்துறையினர் செலவு செய்த நிலையில், அந்த முயற்சி முழுவதும் தோல்வியில் முடிவடைந்தது.
இந்த புலியை இன்னும் ஒரு சில தினங்களில் வால்பாறையில் இருந்து சென்னை அறிஞர் அண்ணா பூங்காவிற்கு இடம் மாற்ற இருப்பதாக கோயம்புத்தூர் வனத்துறை அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.
இதையும் படிங்க: ரூ.100 கோடி நிலமோசடி வழக்கு; சென்னை உயர் நீதிமன்றத்திலும் முன் ஜாமீன் மனு தாக்கல் செய்த எம்.ஆர்.விஜயபாஸ்கர்! - MR Vijayabaskar anticipatory bail