திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ள பகுதிகளான ஆயக்குடி, சட்டப்பாறை, கோம்பைபட்டி, ராமபட்டினம், புதூர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக மூன்று குட்டிகளுடன் கூடிய 10 காட்டு யானைகள் கூட்டமாக விவசாய நிலங்களுக்குள் புகுந்து தென்னை, மா போன்ற பயிர்களை சேதப்படுத்தி வருகிறது.
இதனால், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு, விவசாயிகள் தாலுகா அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதில் கோட்டாட்சியர் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதால், மாவட்ட வன அலுவலர் ராஜ்குமார் தலைமையில், ஒட்டன்சத்திரம் வனச்சரகர் ராஜா மேற்பார்வையில் 20 பேர் கொண்ட வனத்துறை குழு ஒன்று அமைக்கப்பட்டு, இரண்டு வாகனங்களில் இன்று காலை முதல் ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக, நாளை காலை 7 மணி முதல் காட்டு யானைகளை விரட்டும் பணியில் வனத்துறை அதிகாரிகள் ஈடுபட உள்ளதால், விவசாயிகள் தங்களது பட்டா நிலங்களுக்குள் செல்ல வேண்டாம் எனவும், தோட்டங்களுக்குள் வசிக்கும் விவசாயிகள் பாதுகாப்பான இடத்தில் உறங்க வேண்டும் எனவும், இரவு நேரங்களில் வெளியே வருவதைத் தவிர்க்க வேண்டும் எனவும் ஆயக்குடி, ஒபுளாபுரம் பகுதியில் ஒலிபெருக்கி மூலம் வனத்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: இந்தியன் 1 வரும்போது சிக்கிய லஞ்சப்பணம்.. இந்தியன் 2 வெளியீட்டுக்கு முன்னர் கிடைத்தது எப்படி? - Bribe money after 28 years