சென்னை: புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் பஞ்சாயத்திற்கு உட்பட்ட வேங்கைவயல் கிராமத்தில் வசிக்கும் பட்டியலின மக்களுக்கான மேல்நிலை குடிநீர் தேக்கத்தொட்டியில் மனிதக்கழிவுகள் கலக்கப்பட்ட விவகாரம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி இருந்தது.
இது தொடர்பாக சிபிசிஐடி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அந்த குடிநீர்த் தொட்டியில் மனித மலம் கலக்கப்பட்ட நீரின் மாதிரியை எடுத்து சந்தேகத்திற்கிடமான 31 நபர்களுக்கு இதுவரை டிஎன்ஏ பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாது, சம்பவம் நடந்தபோது பகிரப்பட்ட வாட்ஸ் அப் உரையாடல்கள் ஆடியோவில் இருந்த குரல் பதிவுகளைச் சேகரித்து, அது யாருடைய குரல் என்பதையும் உறுதி செய்வதற்கு குரல் மாதிரி பரிசோதனைகள் நடத்த காவல்துறையினர் முடிவு செய்தனர்.
அதன் அடிப்படையில், இரண்டு பெண்கள் உட்பட 3 நபர்களுக்கு குரல் மாதிரி பரிசோதனை மேற்கொள்ள புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் சிபிசிஐடி காவல்துறையினர் கடந்த ஏப்ரல் 15ஆம் தேதி மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்த நிலையில், சிபிசிஐடி காவல்துறையினருக்கு அனுமதி அளித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதன்படி, சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசு தடயவியல் துறையில் குரல் மாதிரி பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. இதற்கு குரல் பகுப்பாய்வு முறை (voice analyzed) என்று பெயர். இதில், பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் நபரை ஆய்வகத்திற்கு நேரில் வரவழைத்து, வெவ்வேறு விதமாகவும், சம்பந்தப்பட்ட குற்றச்சம்பவத்தில் அவர் பேசியதாகக் கூறப்படும் பகுதியை எழுதிக் கொடுத்து பேசச் சொல்லியும், வெவ்வேறு முறைகளில் பேசச் சொல்லியும் குரல் மாதிரிகளைப் பதிவு செய்வர்.
குரல் மாதிரிகள் பதிவு செய்யப்பட்ட பின்பு, அந்த குரல் அதிர்வின் அளவு மற்றும் குரலின் ஏற்ற இறக்கங்கள் ஆகியவை அளவிடப்படும். ஒவ்வொரு குரலுக்கும் ஒரு வித்தியாசக் குறியீடு இருக்கும், அதை தடயவியல் அறிவியலாளர்கள் கண்டறிவர். குறிப்பிட்ட நாட்களுக்குள் ஆய்வு செய்யப்பட்ட குரல் மாதிரியின் முடிவுகள் சீலிடப்பட்ட கவரில் நீதிமன்றத்தில் நேரடியாக தடயவியல் துறை மூலம் அளிக்கப்படும்.
ஆகவே வேங்கைவயல் விவகாரத்தில், புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றம் குரல் மாதிரி பரிசோதனைக்கு அனுமதி அளித்துள்ள உத்தரவின் அடிப்படையில், சென்னை மயிலாப்பூர் தடய அறிவியல் துறை அலுவலகத்திற்கு புதுக்கோட்டை காவல்துறையினர், வேங்கைவயல் பகுதியைச் சேர்ந்த இரண்டு பெண்கள் உட்பட மூன்று பேரை அழைத்து வந்தனர். மூன்று பேரிடமும் தனித்தனியாக குரல் மாதிரி பதிவுகள் எடுக்கப்பட்டு, பகுப்பாய்வு செய்யும் ஆய்வுப்பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஜெயக்குமாரின் உடல் தானா? டி.என்.ஏ. டெஸ்டுக்கு சென்ற மாதிரிகள்.. நீளும் மர்மம்..!