கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மைய பகுதியில் அமைந்துள்ள கருணாபுரம் பகுதியில் கடந்த ஜூன் மாதம் 18ம் தேதி சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்ட கள்ளசாராயத்தை குடித்து பலர் பாதிக்கப்பட்டனர். தடை செய்யப்பட்ட மெத்தனால் கலந்த சாராயத்தை குடித்து உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள் கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவமனைகள் மற்றும் புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
அவர்களில் அடுத்தடுத்து 66 பேர் உயிரிழந்த நிலையில் புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சையில் இருந்த, 72 வயதான கண்ணன் என்பவரும் உயிரிழந்துள்ளார்.
இதன் மூலம், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய பலி எண்ணிக்கை 67 ஆக அதிகரித்துள்ளது. கள்ளச்சாராயம் விற்பனை செய்த விவகாரம் தொடர்பாக கண்ணுக்குட்டி என்கிற கோவிந்த ராஜ், தாமோதரன், கோவிந்தராஜ் மனைவி விஜயாவை தனிப்படை போலீசார் கைது செய்திருந்தனர். இந்த விவகாரத்தில் இதுவரை 21க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், மெத்தனால் விற்பனை செய்ததாக புதுவையைச் சேர்ந்த சின்னதுரை என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த வழக்கை சிபிசிஐடி விசாரித்துவரும் நிலையில், தமிழ்நாடு முழுவதும் சாராய புகாரில் குற்றப் பின்னணி உடையவர்களிடம் காவல்துறையினர் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி அவர்களை கைது செய்து வருகின்றனர்.
இந்நிலையில், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரண சம்பவத்தை தடுக்கத் தவறியதாக தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் சண்முகம் உட்பட தனிப்பிரிவு போலீசார் 7 பேர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் அருந்தி 67 பேர் பலியான சம்பவம் தொடர்பாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 11 வருவாய் வட்டாட்சியர்களை பணியிட மாற்றம் செய்து ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த் அண்மையில் உத்தரவு பிறப்பித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: மதுரையில் நாம் தமிழர் நிர்வாகி படுகொலை.. சிறுவன் உட்பட 4 பேர் கைது.. விசாரணையில் அம்பலமான பின்னணி!