சென்னை: இந்திய விமானப்படையின் 92 ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் அக்டோபர் 6ஆம் தேதி காலை 11 மணி அளவில் விமானப் படைக்கு சொந்தமான போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் உள்ளிட்டவைகளின் சாகச நிகழ்ச்சிகள் நடைபெற இருக்கிறது. அப்போது இந்த சாகச விமானங்கள் காலை தாம்பரம் விமானப் படைத்தளத்தில் இருந்து புறப்பட்டு சென்னை மெரினா கடற்கரையில் சாகசத்தை நிகழ்தவுள்ளன. இதில் இந்திய விமானப் படைக்கு சொந்தமான 72 விமானங்கள் பங்கேற்க உள்ளன.
இந்நிலையில் இந்த நிகழ்ச்சிக்கான ஒத்திகை இன்று இரண்டாம் நாளாக சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்றது. இதில் சுக்கோய் சு 30, MI 17 VH ஹெலிகஃப்டர்கள், அட்வான்ஸ் லைட் ஹெலிகஃப்டர் (ALH) ஹால் தேஜா, மல்ட்டிரோல் காம்பேட் ஏர்கிராப்ட், ரஃபேல் ஏர்கிராப்ட் ஆகியவை ஒத்திகை பயிற்சி எடுத்தனர்.
இதையும் படிங்க: விமானப் படை சாகச ஒத்திகை நிகழ்ச்சி: மெரினாவில் சீறிப்பாய்ந்த விமானங்கள்.. வியப்புடன் கண்டுகளித்த பொதுமக்கள்!
இந்த ஒத்திகையின்போது ஒரு கட்டிடத்தில் பயங்கரவாதிகள் நுழைந்தால் அவர்களை எப்படி கட்டுக்குள் கொண்டுவந்து மடக்கி பிடிப்பது என்பது குறித்து விமானப் படை வீரர்கள் தத்ரூபமாக செய்து காட்டினர். இதை ஏராளமான பொதுமக்கள் கண்டு களித்ததுடன் அவற்றை கைபேசியில் புகைப்படம், வீடியோக்கள் எடுத்து ரசித்தனர்.
இந்த நிகழ்வு குறித்து ஈடிவி பாரத் செய்தியாளரிடம் பேசிய டவுன் சிண்ட்ரோம் ஃபெடரேஷன் ஆஃப் இந்தியா சார்பில் குழந்தைகளுடன் வந்திருந்த கிருத்திகா கூறுகையில், “இந்த சாகச நிகழ்ச்சியை பார்க்கும் பொழுது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. முதல் முறையாக சென்னையில் விமான சாகசத்தை பார்க்கிறோம்.
மேலும் எங்கள் இயக்கத்தில் இருக்கும் குழந்தைகளை அழைத்து வந்தோம். இந்த குழந்தை ஆட்டிசமால் பாதிக்கப்பட்டவர். இந்த நிகழ்ச்சியில் கூட்டத்தை பார்த்து பயப்படுவார்கள் என நினைத்தோம் ஆனால் அவர்கள் இங்கு நிகழ்ந்த சாகத்தில் மட்டும் கவனம் செலுத்தி மகிழ்ச்சியாக கண்டு களித்தனர். மேலும் இந்த மாதம் ஆட்டிசம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் மாதமாகும். இந்நிலையில் இந்த நிகழ்ச்சி நடைபெறுவதில் மகிழ்ச்சி. மேலும் நாங்கள் 6ஆம் தேதி அன்றும் வர உள்ளோம்” என்றார்.
இதையடுத்து பேசிய பார்வையாளர் ஜனனி, “விமான சாகசம் பார்ப்பதற்கு எனக்கு மிகவும் பிடிக்கும், இன்று ஒத்திகை நிகழ்ச்சியை பார்த்ததில் மிக மகிழ்ச்சி. அக். 6ஆம் தேதி என் அம்மாவை அழைத்து வருவது என முடிவு செய்திருக்கிறேன்” என்றார்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்