ETV Bharat / state

மதுரை அருகே 500 ஆண்டுகள் பழமையான விஜயநகர கால நடுகல் சிற்பம் கண்டுபிடிப்பு!

Madurai news: மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே விஜய நகர காலத்தைச் சேர்ந்த 500 ஆண்டுகளுக்கு முற்பட்ட நடுதல் சிற்பம் ஒன்றை தமிழ்நாடு தொல்லியல் துறை அலுவலர்கள் கண்டறிந்துள்ளனர்.

மதுரை அருகே 500 ஆண்டுகள் பழமையான நடுகல் சிற்பம் கண்டுபிடிப்பு

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 22, 2024, 1:45 PM IST

மதுரை: மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே விஜய நகர காலத்தைச் சேர்ந்த 500 ஆண்டுகளுக்கு முற்பட்ட நடுகல் சிற்பம் ஒன்றை தமிழ்நாடு தொல்லியல் துறை அலுவலர்கள் கண்டறிந்துள்ளனர்.

இது குறித்து தமிழ்நாடு தொல்லியல் துறை சார்பாக வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது, ”மதுரை மாவட்டம் திருமங்கலம் வட்டம், நடுகோட்டை கிராம மக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் இணை இயக்குனர் முனைவர் இரா.சிவானந்தம் தலைமையில், மதுரை மாவட்ட தொல்லியல் அலுவலர் மா.ரமேஷ் மற்றும் தொல்லியல் அலுவலர் ரா.அஜய் குமார் ஆகியோர் அடங்கிய குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.

அதன் தொடர்ச்சியாக, இப்பகுதியினைச் சுற்றி மேற்கொண்ட கள ஆய்வின்போது நடுக்கோட்டை கிராமத்தில் இருந்து, வடமேற்கே சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில், சுமார் 500 ஆண்டுகளுக்கு முற்பட்ட விஜயநகர காலத்தினைச் சேர்ந்த அரிய வகை நடுகல் சிற்பமானது குழுவினரால் கண்டறியப்பட்டது.

இந்த நடுகல்லானது, வயல்வெளிகளுக்கு நடுவில் சற்று மேட்டுப்பாங்கான இடத்தில், புதர் மண்டிய நிலையில் கண்டறியப்பட்டது. கருங்கல்லினால் ஆன பலகை கல்லில் செய்யப்பட்ட இந்நடுகல்லானது, சுமார் ஐந்தரை அடி நீளமும், 4 அடி அகலமும் 1 அடி தடிமனும் கொண்டுள்ளது. இச்சிற்பத்தில், மரணமடைந்த வீரன், தனது முன்னங்கால்களை தூக்கிய நிலையில் உள்ள குதிரையின் மீது அமர்ந்து செல்வது போல் புடைப்புச் சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது.

இவ்வீரனின் மேல்நோக்கி உயர்த்திய வலது கையானது, கூர்மையான வாளினை ஏந்திய வகையில் காட்டப்பட்டுள்ளது. இடது கையானது, குதிரையின் கயிற்றினை பிடித்த வகையில் செதுக்கப்பட்டுள்ளது. விஜயநகர காலத்தைச் சார்ந்த சிற்பத்திற்கே உரிய முறுக்கிய மீசை, பக்கவாட்டுக் கொண்டை, தலையணி, காதணிகளுடன் மார்பில் சன்னவீரம், இடையில் குறுவாளுடன் மிக கம்பீரமாக இந்நடுகல் கட்டப்பட்டுள்ளது. பறக்கும் நிலையில் கட்டப்பட்டுள்ள இவ்வீரனின் மேலாடை மற்றும் முன்னங்கால்களை தூக்கிய நிலையில் காட்டப்பட்டுள்ள குதிரையின் சிற்பம், இந்நடுகல் வீரன் குதிரையை இயக்கும் நிலையில் உள்ளது.

நடுகல் வீரனின் இடதுபுறத்தில், அவனது மனைவி கைகூப்பியவாறு நின்ற நிலையில், தலையில் கொண்டையுடனும், கழுத்தில் அணிகலன்களும் அணி செய்கின்றன. இச்சிற்பத்தின் இடது புறம், ஒரு ஆண் உருவமானது நடுகல் வீரனுக்கு குடைபிடித்தவாறு காட்டப்பட்டுள்ளது. மேலும் குதிரையின் கீழுள்ள மூன்று ஆண் உருவங்கள் கையில் வாளுடனும், குடுவையுடனும், செதுக்கப்பட்டுள்ளன. இச்சிற்ப தொகுப்பானது வளைவுகளுடன் கூடிய தோரணத்தின் கீழ் மிக நேர்த்தியாக கட்டப்பட்டுள்ளது” என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: "கோதண்டராமர் கோயில் அர்ச்சகர்களிடம் கண்ணில் பயம்" - ஆளுநர் ஆர்.என்.ரவி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.