தேனி: தேனி மாவட்டம், கம்பம் பள்ளத்தாக்கு இருபோக ஆயக்கட்டு பகுதிகளில், முதல்போக சாகுபடிக்கு நீர் திறப்பின் மூலம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதிகளான உத்தம பாளையம் வட்டத்தில் 11,807 ஏக்கரும், போடி வட்டத்தில் 488 ஏக்கரும், தேனி வட்டத்தில் 2,412 ஏக்கரும் என மொத்தம் 14,707 ஏக்கர் நிலங்களில் இருபோக நெல் சாகுபடி விவசாயம் நடைபெறும்.
இந்த ஆண்டு சரியான நேரத்தில் முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டதன் மூலம் இரண்டு போகம் முழுமையாக செய்ய முடியும் என்ற நோக்கில், விவசாயிகள் நெல் நடவுப் பணிகளை தொடங்கியுள்ளனர். அதன்படி, கம்பம் பள்ளத்தாக்குப் பகுதிகளில் உள்ள விவசாயிகள் நெல் நடவுப் பணியில் மும்முரம் காட்டி வருகின்றனர்.
கம்பம் பள்ளத்தாக்குப் பகுதிகளில் கோ - 51, வைகை -1, கோ -509 போன்ற ரகங்கள் பயிரிடப்பட்டு உள்ளது. இது அதிக மகசூல் கிடைக்கக்கூடிய ரகம் ஆகும். இப்பகுதி விவசாயிகள் பொதுவாக இரண்டாம் போகத்தில் அதிகம் பயிரிடும் விதை நெல்லான கோ -509 ரக நெல்லை முதல் போகத்தில் பயிரிட்டுள்ளனர். இந்த ரக பயிரானது மழைக்காலங்களிலும் சாய்ந்து விடாமல் நன்றாக விளைச்சல் தரக்கூடியது. மேலும், இது 105 நாள் முதல் 110 நாட்களில் விளைச்சல் தரும் குறுகிய காலப் பயிர் ஆகும்.
இது குறித்து விவசாயிகள் கூறுகையில், "தண்ணீர் உரிய நேரத்தில் திறக்கப்பட்டு உள்ளதால் இரு போகம் பெரும் வகையில், விரைவாக நடவு பணியைத் தொடங்கிவிட்டோம். இந்த பக்கத்திற்கு கோ- 509 ரக விதைகளைப் பயிரிட்டு உள்ளோம்.
பருவமழை மற்றும் காற்று காலங்களில் தாங்கக்கூடிய கோ -509 ரக விதை நெல்லை பயிர் செய்துள்ளோம். மேலும், அரசு வழங்கும் மானிய விதை நெல்லை, குறிப்பிட்ட காலத்தில் விரைவாக கொடுத்தால் தான் நட முடியும். வேளாண் விற்பனை நிலையங்களில் தாமதமாக தருவதால் தனியாரிடம் விதை நெல் வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது. இதனை அதிகாரிகள் சரி செய்ய வேண்டும்" என்று கோரிக்கை வைத்து உள்ளனர்.
இதையும் படிங்க: ஊழியரை நோட்டமிட்ட சுங்கத்துறை.. சிக்கிய டிரான்சிட் பயணி.. சென்னை விமான நிலையத்தில் நடந்தது என்ன? - Transit Passenger Gold Smuggling