கோயம்புத்தூர்: கோவை மாவட்டம், சோமையம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட பெரும்பாலான பகுதிகள் மேற்குத்தொடர்ச்சிமலைத் தொடரின் அடிவாரப் பகுதியில் அமைந்துள்ளது. இப்பகுதி மலையடிவாரமாக இருப்பதால், யானைகள், காட்டுப்பன்றிகள், மான்கள் மற்றும் வன உயிரினங்களின் நடமாட்டமும் அதிகமாக உள்ளது.
இந்நிலையில், சோமையம்பாளையம் ஊராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைக் கழிவுகள் வனப்பகுதியை ஒட்டியுள்ள திறந்தவெளியில் கொட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த குப்பைக் கிடங்கில் இன்று (ஏப்.9) மதியம் தீ விபத்து ஏற்பட்டு, குப்பைக் கிடங்கு முழுவதும் தீ மளமளவென பரவியது.
இது குறித்து வனத்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த தகவலறிந்து உடனடியாக விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும், தீ வனப்பகுதிக்கு பரவாமல் இருக்கும் வகையில் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்நிலையில், குப்பைக் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தினால் மருதமலை பகுதி முழுவதும் புகை மூட்டமாக காணப்பட்டது. மேலும், இந்த புகை மூட்டத்தால் பலரும் அவதிப்பட்ட நிலையில், மருதமலை கோயிலுக்கு வந்த நபர் ஒருவர் மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயக்க நிலைக்குச் சென்றுள்ளார்.
இதனையடுத்து, அருகிலிருந்தவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் அவரை கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்போது அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களாக வனத்துறையினரும், கோயம்புத்தூர் வன உயிரின பாதுகாப்பு அறக்கட்டளையினரும் இணைந்து, அந்தப் பகுதியில் தீ தடுப்பு கோடுகள் அமைத்ததால் வனப்பகுதிக்குள் தீ பரவாமல் தடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கத்தி, கட்டைகளுடன் அரசுப் பேருந்தை சேதப்படுத்திய கல்லூரி மாணவர்களுக்கு ஓராண்டு சிறை தண்டனை உறுதி! - College Students Imprisonment