தேனி: தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் அருகே குடிபோதையில் அடிக்கடி தகராறு செய்து வந்த மகனை சரமாரியாக குத்திக் கொன்ற தந்தையை போலீசார் கைது செய்தனர்.
தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் அருகே உள்ளது பி.ரங்கநாதபுரம். இங்குள்ள பெருமாள் கோவில் தெருவில் வசித்து வருபவர் சுப்பிரமணி (66). ஜவுளி வியாபாரம் செய்து வந்த இவர், தனது மனைவி இறந்த பிறகு வீட்டிலேயே இருந்து வந்தார். சுப்பிரமணிக்கு சுகுமார் (33) என்ற ஒரு மகன் இருந்தார்.
இவர் தனியார் வங்கியில் பணியாற்றி வந்தார். இன்னும் திருமணமாகாத நிலையில் சுகுமார் அடிக்கடி மது அருந்திவிட்டு வந்து, தனது தந்தையிடம் தனக்கு திருமணம் முடித்து வைக்க வேண்டும் என்றும், சொத்தை பிரித்து தருமாறும் கேட்டு தகராறு செய்து வந்துள்ளார். தந்தையிடம் தொடர்ந்து தகராறு செய்து வந்த சுகுமாரை, அக்கம்பக்கத்தினரும் கண்டித்துள்ளனர்.
இதையும் படிங்க: அக்.27-ல் தமிழக வெற்றிக் கழகம் முதல் மாநில மாநாடு - விஜய் அறிவிப்பு!
இந்நிலையில், வழக்கம்போல் மது அருந்திவிட்டு வந்த சுகுமார், இன்று அதிகாலை சுமார் 2 மணியளவில் தந்தை சுப்பிரமணியிடம் தகாத வார்த்தைகளைப் பேசி தகராறு செய்துள்ளார். தகராறு முற்றிய நிலையில், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் தந்தை சுப்பிரமணியை குத்த முயன்றுள்ளார். இதனால் அதிர்ச்சியும், ஆத்திரமுமடைந்த சுப்பிரமணி, அந்த கத்தியைப் பிடுங்கி, மகனை சரமாரியாக குத்தினார். இதில் படுகாயமடைந்த சுகுமார் மயங்கி விழுந்தார்.
பின்னர், போடிநாயக்கனூர் ஊரக காவல் துறையினரை தொடர்பு கொண்டு, சுகுமாரை மருத்துவ சிகிச்சைக்கு அனுப்பி வைக்க வேண்டும் என சுப்பிரமணி கூறியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், காவல்துறையினர் வந்து பார்த்தபோது சுகுமார் இறந்து கிடந்தது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து சுப்பிரமணியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், சுகுமார் உடல் பிரேதப் பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.