மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம், மேலமங்கைநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவர் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். இவருடைய மகன் கிஷோர் ஏழாம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில் ஜன.29ஆம் தேதி கடும் வயிற்று வலி காரணமாக மயிலாடுதுறையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்ட சிறுவன் கிஷோர் உயிரிழந்தார். அவரது மறைவிற்கு தனியார் மருத்துவமனை அளித்த தவறான சிகிச்சையே காரணம் எனக் கூறி மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் நேற்று (பிப்.5) சிறுவனின் தந்தை புகார் அளித்தார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சிறுவனின் தந்தை, "மாவட்ட ஆட்சியர் இது தொடர்பாக அனைத்து நடவடிக்கைகள் எடுத்து வருவதாக கூறினார். இதனால் எனக்கு தைரியமும், தன்னம்பிக்கையும் வந்துள்ளது. தவறான சிகிச்சை அளித்த மருத்துவமனையை மூட வேண்டும் என்பதே எனது நடவடிக்கை. தனியார் மருத்துவமனையில் சரிவர உபகரணங்கள் எதும் இல்லை. மாவட்ட ஆட்சியர் இது தொடர்பாக நடவடிக்கை எடுப்பார் என நம்புகிறேன் என்று கண்ணீர் மல்க கூறினார்.
முன்னதாக, வயிற்று வலியால் அவதிப்பட்ட சிறுவன் குடல் வால் அறுவை சிகிச்சை நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே உயிரிழந்துள்ளார். இதனை மருத்துவமனை நிர்வாகம் மறைந்து ரமணா பட பாணியில் சிறுவனுக்கு சிகிச்சையளித்ததாகவும், 12 வயது சிறுவனுக்கு அதிக அளவில் மயக்கமருந்து செலுத்தப்பட்டதால் தான், சிறுவன் உயிரிழந்தான் எனக் கூறி அன்றைய தினமே உறவினர்கள் மற்றும் பெற்றோர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் வட்டாட்சியர் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பிரேதப் பரிசோதனை செய்த அறிக்கையின்படி, தனியார் மருத்துவமனை மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மருத்துவத்துறை அதிகாரிகள் உறுதியளித்ததன் பேரில், சிறுவன் கிஷோரின் உடல் பிரேதப் பரிசோதனை செய்து தகனம் செய்யப்பட்டது. மேலும், அரசு மருத்துவமனை பிரேதப் பரிசோதனை அறிக்கையை வழங்காமல் அலைக்கழிப்பதாக சிறுவனின் தந்தை ஏற்கனவே குற்றம் சாட்டினார்.
இதையும் படிங்க: கூகுள் மேப் மூலம் செல்போன் திருடனை பிடித்த இளைஞர்! இணையத்தில் பகிர்ந்த ருசிகர தகவல்!