தேனி: போடிநாயக்கனூர் மேற்குதொடர்ச்சிமலைப் பகுதிகளான போடி மெட்டு, குரங்கணி டாப் ஸ்டேஷன், கொட்டகுடி, சென்ட்ரல், அகமலை போன்ற பல்வேறு பகுதிகளில் சுமார் ஆயிரம் ஏக்கருக்கு மேல் காப்பி கொட்டை பயிரிடப்பட்டு வருகிறது. காப்பி உற்பத்தி மற்றும் விற்பனையில் தமிழ்நாட்டில் 5வது இடத்தில் இருந்து வரும் இப்பகுதியில், அரேபிகா பிளான்ட்டேஷன், அரேபிகா செலக்ட் ரக காபி கொட்டைகள் பயிரிடப்பட்டு வருகிறது.
தற்போது இப்பகுதியில் அரேபிகா பிளாண்டேஷன் மற்றும் அரேபியா செலக்ட் ரக காபி கொட்டை அதிகம் உற்பத்தி செய்து வருகின்றனர். காபி கொட்டை ரகங்களில் சுவையில் முக்கிய பங்கு வைக்கும் பீபரி, ரொபோஸ்டோ போன்ற ரகங்களுக்கு அடுத்து அரேபிகா காபி கொட்டை ரகம் அதிகளவில் இங்குதான் ஏற்றுமதியாகிறது.
தமிழ்நாட்டில் போடிநாயக்கனூரில் உள்ள மத்திய அரசு நிறுவனமான காப்பி வாரியம் விரிவாக்க நிறுவன இணை இயக்குனரக அலுவலகம் மூலம், இப்பகுதியில் உள்ள காப்பி விவசாயிகளுக்கு மானிய விலையில் செடிகள், விவசாய உபகரணங்கள் மற்றும் விவசாயம் குறித்த விளக்க உரைகள் வழங்கப்பட்டு வருகிறது.
அதாவது, இந்த காப்பி கொட்டைகள் மே மற்றும் ஜூன் மாதங்களில் பெய்யும் மழை காரணமாக, காபிச் செடிகளில் பூ பூக்க துவங்குகிறது. அதனைத் தொடர்ந்து டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி ஆகிய 3 மாதங்களில் காப்பி பழங்கள் அறுவடை செய்யப்படுகிறது. பின்னர் அவை உலர வைக்கப்பட்டு விற்பனைக்கும், ஏற்றுமதிக்கும் கொண்டு செல்லப்படுகிறது.
இந்நிலையில், கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு காபி கொட்டை உற்பத்தி சற்று அதிகரித்து, தற்போது முற்றிலும் காப்பி பயிர்கள் அறுவடை செய்யப்பட்டுள்ளது. ஆனால், தற்போது பதப்படுத்தப்பட்ட அரேபியா பிளான்டேஷன் ரக காபி தளிர் விலையானது கிலோவிற்கு ரூ.280 வரை விற்கப்படுகிறது. அதாவது கடந்த ஆண்டு கிலோ ஒன்றுக்கு ரூ.320 வரை கொள்முதல் செய்யப்பட்ட நிலையில், இந்த ஆண்டு 1 கிலோ ரூ.40 வரை குறைந்து, 280 ரூபாய் வரை கொள்முதல் செய்யப்படுவதால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
விலை அதிகரிக்கும் என்று இருப்பு வைத்து காத்திருந்த நிலையில், ஆன்லைன் வர்த்தகம் மூலம் விலை குறைந்துள்ளதாகவும், இதனால் லாபத்தில் இழப்பைச் சந்தித்து வருவதாகவும் விவசாயிகள் வேதனை தெரிவித்து உள்ளனர். மேலும், கடந்த ஆண்டை விட உற்பத்திச் செலவுகள், விவசாயக் கூலி, ஆட்களின் சம்பளம் விகிதம் என அனைத்தும் அதிகரித்துள்ள நிலையில், காப்பி தளிர் விலை 40 ரூபாய் வரை குறைந்துள்ளதால், விவசாயிகள் தங்கள் லாபத்தை இழந்து ஏமாற்றம் அடைந்துள்ளதாக வருத்தம் தெரிவிக்கின்றனர்.