திருவாரூர்: திருவாரூர் அடுத்த கருப்பூர் கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான பாமாயில் தயாரிக்கும் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலைக்கு தினமும் 10 லட்சம் லிட்டர் தண்ணீர் எடுத்துச் செல்லப்படுவதாகவும், மேலும் தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் கழிவு நீரை நிலத்திற்கு அடியில் பம்பிங் செய்து வெளியேற்றுவதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
இதனால் தொழிற்சாலையைச் சுற்றியுள்ள சுமார் 500 ஏக்கர் விவசாய நிலம் சேதம் அடைவதாகவும் விவசாயிகள் கூறுகின்றனர். அதேபோல், சேமங்கலம் பாசன வாய்க்காலிலும் இந்த கழிவு நீரை வெளியேற்றுவதால், கானூர், அடியக்கமங்கலம், சேமங்கலம், அலிவலம், சித்தாநல்லூர் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள சுமார் 500 ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் முற்றிலுமாக பாதிக்கப்படுவதாக குற்றம் சாட்டப்படுகிறது.
மேலும், இந்த தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் வாயுவானது காற்றில் கலந்து பொதுமக்கள் சுவாசிக்க முடியாத சூழல் உருவாகுவதாகவும், மேலும் கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு சுவாசக் கோளாறு உள்ளிட்ட நோய்கள் ஏற்படுவதாகவும் வேதனை தெரிவிக்கின்றனர்.
இந்த நிலையில், அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் உடனடியாக கருப்பூரில் செயல்பட்டு வரும் இந்த பாமாயில் தயாரிக்கும் தொழிற்சாலையை அகற்ற நடவடிக்கை எடுப்பதை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்த விவசாயி மதன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறுகையில், "இந்த தொழிற்சாலையில் கழிவுநீர் பூமிக்கு அடியில் அனுப்பப்படுவதால், மழை பெய்யும் போது இந்த பகுதியில் உள்ள விவசாய நிலங்கள் பாதிப்படைகிறது. ஆனால், சுமார் ஐந்து ஆண்டுகளாக இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டி கூறியும் நடவடிக்கை இல்லை" எனக் கூறினார்.
இதையும் படிங்க: ஒரு ஆளுக்கு 50 மில்லி மண்ணெண்ணெய் தான்.. விலையோ ரூ.2 தான் - கொல்லங்குடி நியாய விலைக்கடையில் நடப்பது என்ன?