திருவாரூர்: நடப்பாண்டில் ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் கிலோ பருத்தி ரூ.100-க்கு கொள்முதல் செய்ய வேண்டும், கோட்டூர் பகுதியில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் அமைத்து தர வேண்டும் என்று திருவாரூர் மாவட்ட விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
இது குறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், “திருவாரூர மாவட்டத்தில் நெல்லுக்கு அடுத்தபடியாக, அதிக அளவில் பருத்தி சாகுபடி செய்வது வழக்கம். குறிப்பாக, இந்த ஆண்டு குறுவை மற்றும் சம்பா தாளடி பயிர்கள் தண்ணீர் பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
அதனை ஈடு செய்யும் வகையில், திருவாரூர் மாவட்டம் கோட்டூர் ஒன்றியத்திற்குட்பட்ட கோட்டூர், புழுதிக்குடி, அகரவயல், ஆலாத்தூர், ராயநல்லூர், விக்ரபாண்டியம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஏறத்தாழ 1,550 ஏக்கர் பரப்பளவில் பருத்தி சாகுபடியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
குறிப்பாக, பருத்திக்கு குறைந்த அளவே தண்ணீர் போதுமானதாக உள்ளதால், பருத்தி சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். தற்போது பருத்தி பயிரிடப்பட்டு 50 நாட்களுக்கு மேலாகியுள்ள நிலையில், ஏக்கர் ஒன்றுக்கு ரூ.60 ஆயிரம் வரை செலவு செய்து சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த ஆண்டு ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் 1 கிலோ பருத்தியானது ரூ.50 முதல் 60 வரையில் கொள்முதல் செய்யப்பட்டுளது. இதனால் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனவே, நடப்பாண்டில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் கிலோ பருத்தி ரூ.100 வரை கொள்முதல் செய்ய வேண்டும் என்று விவசாயிகளின் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
மேலும், கோட்டூர் பகுதியில் அறுவடை செய்யப்பட்ட பருத்தியானது, திருவாரூரில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டிய நிலை உள்ளது. அங்கு கொண்டு செல்வதற்கு அதிக அளவில் செலவாவதால், கோட்டூர் பகுதியில் ஒரு ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் அமைத்து தர வேண்டும் என்றும், இது குறித்து உடனடியாக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
மேலும், கோட்டூர் பகுதிகளில் ஒரு சில வருவாய் கிராமங்களுக்கு பருத்தி இன்சூரன்ஸ் உள்ளது. அதேபோல், பல்வேறு கிராமங்களுக்கு பருத்தி இன்சூரன்ஸ் என்பது இல்லாமல் இருந்து வருகிறது. எனவே, அது குறித்தும் வேளாண்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
இதையும் படிங்க: மற்றொரு ‘வேங்கைவயல்’ சம்பவம்: குடிநீர் தொட்டியில் மாட்டு சாணம்..கந்தர்வகோட்டையில் அதிர்ச்சி! - Cow Dung Found Drinking Water Tank