திண்டுக்கல்: பழனி அருகே மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள சட்டப்பாறை, கோம்பைப்பட்டி, ராமபட்டினம்புதூர், கணக்கன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான மான், காட்டெருமை, யானைகள், சிறுத்தைகள் அதிகம் வசித்து வருகின்றன. இந்நிலையில், சட்டப்பாறை பகுதியில் கடந்த சில மாதங்களாக காட்டு யானையின் அச்சுறுத்தலால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இரண்டுக்கும் மேற்பட்ட விவசாயிகள் காட்டு யானை தாக்குதலில் உயிரிழந்துள்ளனர்.
மேலும், சிலர் காட்டு யானை மற்றும் காட்டெருமையின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர். இந்நிலையில், கனகராஜ் என்பவர், தனது விவசாயத் தோட்டத்தில் தென்னை மரம், எலுமிச்சை உள்ளிட்டவற்றை வைத்து விவசாயம் செய்து வருகிறார். இவர்களது தோட்டம் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ளதால் காட்டு யானைகள் கூட்டமாக வந்து மா, தென்னை போன்றவற்றை நாசம் செய்து வருகிறது.
இதில் நூற்றுக்கும் மேற்பட்ட மாங்காய்கள் விற்பனைக்கு தயாராக இருந்த நிலையில், இரண்டு நாட்களாக காட்டு யானைகள் தோட்டத்தில் புகுந்து மரங்களையும், காய்களையும் சேதப்படுத்தி உள்ளது. இதனால் சுமார் பத்து லட்சம் ரூபாய்க்கு மேல் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும், கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக யானைகளே வராத இந்த விவசாயப் பகுதிகளில் தற்போது காட்டு யானை, காட்டெருமை நடமாட்டம் அதிகரித்துள்ளதாகவும் குற்றம் சாட்டுகின்றனர்.
மேலும், உடுமலை அமராவதி அணை ஒட்டியுள்ள பகுதிகளில் காட்டு யானைகள் வழித்தடம் அடைக்கப்பட்டதால் யானைகள் ஊருக்குள் நுழைவதாகவும், இதனால் காட்டு யானைகளின் நடமாட்டத்தில் இருந்து தங்களைக் காப்பதற்கு, மீண்டும் காட்டு யானைகளை அமராவதி அணையை ஒட்டியுள்ள பகுதிகளுக்கு விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: 54 ஆண்டுகளுக்கு பிறகு திண்டுக்கல் அபிராமி அம்மன் கோயில் தெப்பத் திருவிழா! - Dindigul Theppa Thiruvizha