திருப்பத்தூர்: திருப்பத்தூர் அடுத்த அங்கநாதவலசை என்ற கிராமத்தில் பழமை வாய்ந்த மாரியம்மன் கோயில் உள்ளது. அந்த இடத்தில் ஊர் மக்கள் புதியதாக பெரிய கோயில் ஒன்றை கட்டி வருகின்றனர். இந்த நிலையில், அந்த ஊர் நாட்டாமையாக இருக்க கூடிய முன்னாள் டி.எஸ்.பி வெள்ளையன் என்பவருக்கும் கோயில் அருகேயுள்ள 6 வீட்டுக்கும் ஏதோ முன் விரோதம் இருப்பதாக கூறப்படுகிறது.
இதனால் கோயிலுக்கு சுற்று சுவர் எழுப்பவதாக கூறி கோயிலை கடந்து இருக்கும் 6 வீடுகளுக்கு செல்ல வழி விடாமல் கான்கிரீட் சுற்று சுவர் எழுப்பி உள்ளனர். அது குறித்து அவர்கள் கேட்டபோது, 'இது அடித்தளம்தான் அதன் மேல் உங்களுக்கு வழி இருக்கும்' என்று சொல்லி விட்டு, அவர்கள் சென்று வர 3 அடி வழி மட்டும் விட்டு விட்டு சுற்று சுவர் எழுப்பியுள்ளனர்.
இதனால், செய்வதறியாது அந்த 6 குடும்ப மக்கள் ஊரை எதிர்த்து காவல் நிலையத்திலும், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் புகார் அளித்துள்ளனர். இது குறித்து சார் ஆட்சியர் அலுவலகத்தில் அமைதி பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர். இருப்பினும் அவர்களால் பிரச்சினை யை தீர்க்க முடியாமல் சென்றுள்ளது. அதன் பிறகு மீண்டும் பிரச்சினை தொடங்கி உள்ளது. இதனை அறிந்த திருப்பத்தூர் திமுக சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி தலையிட்டு அந்த 6 குடும்பங்கள் சென்று வர 11 அடி வழி விடவேண்டும் என்று கூறி சென்றுள்ளார்.
அதனை வருவாய்த்துறை செய்து தர வேண்டும் என்று கூறியதாக தெரிகிறது. இதனால் அந்த 6 குடும்பங்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த நிலையில், அந்த 6 வீடுகள் இருக்கும் பகுதியில் ஒரு மூதாட்டி உயிரிழந்துள்ளார். அவரை அடக்கம் செய்ய ஒரு பக்கம் சுற்று சுவரை இடித்து விட்டு எடுத்து சென்று அடக்கம் செய்துள்ளனர்.
அதனை தொடர்ந்து நேற்று காரிய சடங்கு நடைபெற்றுள்ளது. அப்போது காரியத்திற்கு சில உறவினர்கள் வந்ததும் 6 வீட்டுக்காரர்கள் அந்த கான்கிரீட் போட்ட சுற்று சுவரை இரவு நேரத்தில் அகற்றி உள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த ஊர் மக்கள் சுற்று சுவரை இடித்த நபர்களை சரமாரியாக அடித்து உள்ளனர். அதன் பிறகு பாதிக்க பட்ட நபர்கள் 100, 108க்கு அழைத்து உள்ளனர். 108 ஆம்புலன்ஸ் அந்த ஊருக்கு சென்றதும் காயம் அடைந்த நபரை ஏற்றி செல்ல கூடாது என்று அந்த பகுதியை சேர்ந்த மக்கள் மறித்து எங்களுக்கு தான் அடிபட்டு உள்ளது என்று ஆம்புலன்சில் ஏறி சென்றதாக கூறப்படுகிறது.
இதனால் அந்த 6 குடும்பத்தினர் அனைத்து துறை அதிகாரிகளுக்கும் அழைப்பு விடுத்து எங்களை காப்பாற்றுங்கள் என்று கோரிக்கை வைத்த நிலையில் அந்த பகுதியில் ஏராளமான போலீஸ் குவிக்கப்பட்டு பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை மீட்டு ஆம்புலன்ஸ் உதவியோடு மருத்துவமனையில் சேர்த்து உள்ளனர்.
இது குறித்து திருப்பத்தூர் கிராமிய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பாதிக்கப்பட்ட நபர்கள் இது குறித்து தெரிவிக்கையில், நாங்களும் கோயில் கட்ட நன்கொடை அளித்து உள்ளோம், நாங்களும் தான் பங்கேற்றோம், ஆனால் கோயில் நிர்வாகம் என்ற பெயரில் அந்த பகுதியில் வசிக்கும் ரிட்டயர்டு டி.எஸ்.பி வெள்ளையன் இது போன்று ஊர் மக்களை ஏவி விட்டு வேலை செய்கிறார். என்று கூறினார். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தகாத உறவை தட்டிக்கேட்ட மனைவிக்கு கத்திக்குத்து.. கணவனுக்கு நீதிமன்றம் விதித்த பரபரப்பு தீர்ப்பு!