சென்னை: சென்னை எண்ணூரில் உள்ள கோரமண்டல் இண்டர்நேஷனல் லிமிடெட் உரத் தொழிற்சாலையில் இருந்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 26ஆம் தேதி அமோனியா வாயு கசிவு ஏற்பட்டது. இந்த வாயு கசிவில் அப்பகுதியில் வசித்து வந்த ஐம்பதுக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர்.
இந்த நிலையில், சட்டப் பேரவையில் இன்று (பிப்.21) கோரமண்டல் ஆலை குறித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிறப்புக் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர். இந்த தீர்மானத்தின் மீது பேசிய உறுப்பினர்கள், "ஆலையில் இருந்து வெளியேறிய அமோனியா வாயுவால் மக்கள் மிகுந்த பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். எனவே, இந்த ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும்" என வலியுறுத்தினர்.
இதற்குப் பதிலளித்த சுற்றுச்சுழல் துறை அமைச்சர் மெய்யநாதன், "ஆலையில் இருந்து அமோனியா வாயு கசிவினை கண்டறிந்தவுடன் துரித நடவடிக்கை எடுக்கப்பட்டு 20 நிமிடங்களில் குழாயில் ஏற்பட்ட வாயுக் கசிவு முற்றிலும் நிறுத்தப்பட்டது" என்று தெரிவித்தார்.
மேலும் தொடர்ச்சியாகப் பேசிய அவர், "வாயுக் கசிவு குறித்து ஆய்வு மேற்கொள்ளத் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் ஏழு உறுப்பினர்களைக் கொண்ட தொழில்நுட்ப குழு அமைக்கப்பட்டதாகவும்; தொழிற்சாலையை ஆய்வு செய்த குழு, தொழிற்சாலையில் கடலுக்கு அடியில் தற்போதுள்ள அமோனியா கொண்டு செல்லும் குழாய்களுக்குப் பதிலாக அதி நவீன கண்காணிப்பு தானியங்கி கட்டுப்பாட்டுடன் மற்றும் விபத்து தடுப்பு சாதனங்களுடன் அமைக்கப்பட வேண்டும்" என பரிந்துரைத்துள்ளதாகத் தெரிவித்தார்.
இதுமட்டும் அல்லாது, "தொழிற்சாலை பகுதி மற்றும் அமோனியா எடுத்துச் செல்லும் குழாய் உட்பட அனைத்து இடங்களிலும் முழு தானியங்கி கட்டுப்பாடு அமைப்பு ஏற்படுத்த வேண்டும்; புயல் மற்றும் வெள்ளம் போன்ற இயற்கை சீற்றங்கள் ஏற்படும்போது அமோனியா சேமிப்பு தொட்டி மற்றும் அமோனியா எடுத்துச் செல்லும் குழாய்களின் பாதுகாப்பு குறித்து முழுமையாக ஆய்வு செய்து பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்" என்றும் தொழிற்சாலையை ஆய்வு செய்த குழு பரிந்துரைத்துள்ளதாக அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்தார்.
அதேபோல், ஆலை நிர்வாகத்திடம் இருந்து 5 கோடியே 93 லட்சம் இழப்பீட்டுத் தொகை வசூலிக்க விளக்கம் கேட்டு நிறுவனத்துக்குக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அமைச்சர் மெய்யநாதன், நிறுவனத்தை ஆய்வு செய்த குழு பரிந்துரைத்த பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வரை கோரமண்டல் இண்டர்நேஷனல் லிமிடெட் உரத் தொழிற்சாலை இயங்க அனுமதி வழங்கப்படமாட்டாது என உறுதியளித்தார்.
இதையும் படிங்க: புதிய பாம்பன் பாலம்: ராமேஸ்வரம் ரயில் நிலையத்தில் ரயில்வே வாரிய தலைவர் ஆய்வு..!