சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட பணிகளுக்காக நிதி ஒதுக்கக் கோரி பிரதமரை சந்திப்பதற்காக நேற்றைய தினம் டெல்லி புறப்பட்டு சென்றார். இதையடுத்து இன்று டெல்லியில் பிரதமரை சந்தித்து விட்டு, மீண்டும் சென்னை திரும்பினார்.
சென்னை வந்தடைந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை 471 நாட்கள் சிறைவாசத்திற்கு பிறகு நேற்று மாலை விடுதலையான முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி விமான நிலையத்திற்கு நேரடியாக சென்று சந்தித்து வரவேற்று அவரிடம் ஆசீர்வாதம் பெற்றார். முன்னதாக, செந்தில் பாலாஜி அமைச்சர் உதயநிதி ஸ்டாலினையும் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
இதையடுத்து விமான நிலையத்தில் உள்ள விஐபிகள் பகுதியில் உள்ள அறைக்கு சென்று சிறிது நேரம் அமைச்சர்கள் மற்றும் செந்தில் பாலாஜி உடன் பேசிவிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கிருந்து இல்லத்திற்கு புறப்பட்டு சென்றார். இதையடுத்து அமைச்சர்களும், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியும் விமான நிலையத்திலிருந்து புறப்பட்டுச் சென்றனர்.
இதையும் படிங்க : 471 நாட்கள் சிறைவாசத்துக்கு பிறகு வெளியே வந்த செந்தில் பாலாஜி சொன்ன முதல் வார்த்தை என்ன?
முன்னதாக, சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பல்வேறு நிபந்தனைகளை விதித்து ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. எனினும், அமைச்சராக எந்த தடையும் விதிக்கவில்லை.
காலமெல்லாம் நிலைத்திருக்கும் கருப்பு சிவப்பின் எதிர்காலம்..
— V.Senthilbalaji (@V_Senthilbalaji) September 27, 2024
தமிழ் கூறு நல்லுலகின் நம்பிக்கை.. தமிழர்களின் நம்பிக்கை...
என்னை
தோளோடு தோளாக அணைத்துக் கொண்ட இளஞ்சூரியனுக்கு
வாழ்நாளுக்கும் கடமைப்பட்டிருக்கிறேன்..@Udhaystalin pic.twitter.com/37p3mPX1sI
உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ள ஜாமீன் உத்தரவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் கொடுத்துள்ளனர். அப்போது செந்தில் பாலாஜி வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் சில குழப்பங்கள் உள்ளன என நீதிபதி அதனை ஏற்க மறுத்தார். பின்னர் அமலாக்கத்துறை தரப்பு வழக்கறிஞரை அழைத்து வர உத்தரவிடப்பட்டு அவரிடம் விளக்கம் கேட்கப்பட்டது.
471 நாட்கள் தனிமையின் இருள் நீங்கி சூரியனின் காலடியில்.
— V.Senthilbalaji (@V_Senthilbalaji) September 27, 2024
ஒவ்வொரு நாளும், நிமிடமும், நொடியும் உங்களையே நினைத்திருந்தேன்
தலைவரே.!
தாயுமானவராய் தாங்கினீர்கள்.. என் உயிர் உங்கள் காலடியில் சமர்ப்பணம்..
உங்கள் நம்பிக்கைக்கும் அன்பிற்கும் வாழ்நாள் முழுக்க நன்றிக் கடன்பட்டிருக்கிறேன்! pic.twitter.com/wtwJCYvg0R
செந்தில் பாலாஜிக்கு அவரது 2 உறவினர்கள் வழங்கிய 25 லட்ச ரூபாய்க்கான பிணை உத்தரவாதங்களை ஏற்க ஆட்சேபணை இல்லை என அமலாக்கத்துறை தெரிவித்தது. இதையடுத்து, செந்தில் பாலாஜி விடுதலைக்கான பிணை உத்தரவாதங்களை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்