சென்னை: சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் இன்று அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் தலைமையில், பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அவசர செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், உட்கட்சி விவகாரம், கட்சியை பலப்படுத்துவது, கட்சி விதிகளில் மாற்றம் செய்வது, எடப்பாடி பழனிசாமிக்கு கூடுதல் அதிகாரம் வழங்குவது, தமிழக சட்ட ஒழுங்கு குறித்து அரசுக்கு கண்டனம் என பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும், நியாயவிலைக் கடைகளில் அத்தியாவசியப் பொருட்கள் வழங்காத திமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்தும், மின் கட்டண உயர்வை ரத்து செய்யவும், மாதாந்திர மின்கட்டண கணக்கீட்டு முறையை அமல்படுத்தவும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அத்துடன், மத்திய நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டிற்குத் தேவையான திட்டங்களை அறிவிக்காததற்கும், போதுமான நிதியை ஒதுக்காததற்கும் மத்திய அரசைக் கண்டித்தும், மருத்துவக் காப்பீடு பிரிமீயத்திற்கு 18 சதவீத ஜிஎஸ்டி வரியை ரத்து செய்ய மத்திய அரசை வலியுறுத்தியும், வயநாடு நிலச்சரிவை தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.
செயற்குழு கூட்டத்திற்குப் பின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், முதலமைச்சர் வெளிநாடு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் நேரத்தில் ஆட்சி கவிழ்ந்துவிடுமோ என்ற அச்சத்தால் தான், கருணாநிதி நாணய வெளியீட்டு விழாவுக்கு ராஜ்நாத் சிங்கை அழைப்பது, ஆளுநர் தேநீர் விருந்தில் பங்கேற்பது என பாஜகவை தாஜா செய்து வருவதாக முதலமைச்சர் ஸ்டாலினை ஜெயக்குமார் விமர்சித்தார்.
மேலும், அதிமுக ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்ட திட்டங்களை திமுக அரசு இருட்டடிப்புச் செய்து வருவதாகக் கூறிய ஜெயக்குமார், அம்மா மருந்தகத்தை மூடிவிட்டு, தற்போது முதல்வர் மருந்தகம் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பெயரை மாற்றி லேபிள் ஒட்டும் வேலையைத்தான் திமுக அரசு செய்கிறது, இந்த அரசுக்கு சுய புத்தி இல்லை என விமர்சித்தார்.
தொடர்ந்து பேசிய ஜெயக்குமார், ஆளுநர் தேநீர் விருந்து என்பது சுதந்திர தினத்தன்று மரபுப்படி நடத்துவது. அதனால் அதிமுக பங்கேற்றது. திமுக கூட்டணி கட்சிகள் புறக்கணித்த நிலையில், காலையில் திமுக புறக்கணிப்பதாக அறிவித்துவிட்டு, அரசு சார்பில் கலந்து கொள்வோம் என அறிவிக்கிறார்கள். ஸ்டாலின் வேறு, திமுக வேறா என கேள்வி எழுப்பிய ஜெயக்குமார், ஏன் எட்டு அமைச்சர்கள் வரிந்து கட்டிக் கொண்டு தேநீர் விருந்துக்குச் சென்றார்கள் என கேள்வி எழுப்பினார்.
மின் கட்டண உயர்வு காரணமாக பல தொழிற்சாலைகள் மூடும் நிலை உருவாகியுள்ளது. இந்தச் சூழலில் வெளிநாடுகளில் முதலீடு ஈர்க்க முதலமைச்சர் செல்கிறார். முதலமைச்சர் வெளிநாடு பயணங்கள் மூலமும், திமுக ஆட்சிக்கு வந்த இந்த மூன்று ஆண்டுகளில் ஈர்க்கப்பட்ட முதலீடுகள் எவ்வளவு, எத்தனை நிறுவனங்கள் தொடங்கப்பட்டுள்ளது, எத்தனை பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது என்பது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என கேட்டோம். இதுவரை வெளியிடவில்லை என தெரிவித்தார்.
கருணாநிதி நாணய வெளியீட்டு விழாவுக்கு அதிமுகவுக்கு அழைப்பு வந்ததா என்ற கேள்விக்கு, நாணய வெளியீட்டு விழாவில் அதிமுக பங்கேற்காது என திட்டவட்டமாக ஜெயக்குமார் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு விசாரணைக்கு மறுக்கும் ரவுடி நாகேந்திரன்? அடுத்தகட்ட மூவ் என்ன?