கோயம்புத்தூர்: தமிழ்நாட்டில் நாடாளுமன்றத் தேர்தல் இன்று (ஏப்.19) காலை 7:00 மணி முதல் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில், பொள்ளாச்சி தொகுதியில் 3 மணி நிலவரப்படி 53.14 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.
இந்நிலையில், பொள்ளாச்சி நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட சுகுணாபுரம் அரசு உயர்நிலைப் பள்ளி வாக்குச்சாவடியில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, தனது மனைவி வித்யா மற்றும் மகன் விகாஸ் உடன் வந்து தனது வாக்கினைச் செலுத்தினார்.
அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "அதிமுக கூட்டணி முழுமையாக இந்தத் தேர்தலில் வெற்றி பெறும். மக்கள் மாற்றம் வேண்டும் என்று விரும்புகின்றனர். இந்நிலையில், கோவை, பொள்ளாச்சி, திருப்பூர், ஈரோடு, நீலகிரி உட்பட அனைத்து தொகுதிகளிலும் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள்.
பாஜக மற்றும் திமுகவினர் ஓட்டுக்குப் பணம் கொடுத்தாலும் ஜனநாயக முறைப்படி, நேர்மையாக தாங்கள் இந்தத் தேர்தலை எதிர்கொள்ள விரும்புகிறோம். முதன்முறை வாக்காளர்களின் ஓட்டு அதிமுவிற்கு தான் அதிகம் கிடைக்கும். ஏனென்றால், பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வித் துறையில் மாணவர்களுக்கு அதிமுக ஆட்சியில் தான் பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டது. மருத்துவக் கல்வியில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கியது உள்ளிட்ட திட்டங்களால் இளம் வாக்காளர்கள் அதிமுகவிற்கே வாக்களிப்பார்கள்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: திருச்சியில் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமிலிருந்து வாக்களித்த முதல் பெண்! - Lok Sabha Election 2024