சென்னை : மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 97வது பிறந்தநாளையொட்டி, சென்னை அடையாற்றில் உள்ள அவரது மணிமண்டபத்தில் உள்ள திருவுருவப்படத்திற்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "திரைப்படங்கள் மூலம் சிவாஜி கணேசன் மக்கள் மனதில் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார். அதிமுக சார்பில் அவரது திருவுருவப்படத்திற்கு மரியாதை செலுத்தப்பட்டது. சிவாஜி அவர்களுடைய ஸ்டைல் இன்றைக்கும் தனிபானி.
கதாபாத்திரத்தோடு ஒன்றிணைந்து நடிக்கக் கூடியவர். நடையில் சிவாஜியை அடித்துக் கொள்ள முடியாது. அவர் நடந்து வருவது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். கர்ணன் படம் தான் நான் விரும்பி ரசித்த திரைப்படம். அந்த காலக்கட்டத்தில் சிறந்த படமாக விளங்கியது. அந்த படத்தில் உள்ள அத்தனை பாடல்களும் எனக்கு பிடிக்கும். மக்கள் மனதில் இன்றும் வாழ்ந்துக் கொண்டு இருக்கிறார்.
தலித்களுக்கு அமைச்சரவை இடம் கொடுத்து விட்டால், தலித்துக்கு முன்னேற்றம் என சொல்ல முடியுமா? தென் மாவட்டங்களில் சாதி கொடுமைகள் தலைவிரித்து ஆடுகிறது. வேங்கைவயல் போன்று ஒரு சம்பவம் எதிர்காலத்தில் இனி வரக்கூடாது.
இன்று (01/10/2024) பத்ம ஶ்ரீ, நடிகர் திலகம் திரு சிவாஜி கணேசன் அவர்களின் 96-வது பிறந்தநாளை முன்னிட்டு அடையாரில் உள்ள அவரது மணிமண்டபத்தில் கழகத்தின் சார்பில் அவருக்கு புகழ்மாலை சூட்டிய பிறகு செய்தியாளர்களை சந்தித்த போது... pic.twitter.com/cKWgXiYMrT
— DJayakumar (@djayakumaroffcl) October 1, 2024
விஞ்ஞானிகள் வளர்ந்த இன்றும், அந்த சம்பவத்தில் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க முடியாமல் உள்ளது. தலித்துக்கு எதிரான கொடுமைகளும், தொடர்ந்து தாக்குதலுக்குள்ளாவதும், பல பிரச்னைகள் தினம், தினம் சந்திக்க கூடிய சூழல்தான் உள்ளது. அமைச்சரவை மாற்றத்தில் தலித்தைக் கொண்டு வந்தால் போதாது. மாற்றம் என்பது தலித்துக்கு முழுமையானதாவும், அவர்களுக்கு பாதுகாப்பு வழங்குவதும் தான். திமுக அதை கடைபிடிக்காது.
துணை முதல்வர் பதவி விமர்சனம் : துணை முதலமைச்சராக உதயநிதியை அறிவித்துள்ளதால் தமிழகத்தில் தேனும், பாலும் ஆறாக ஓடப்போகிறாரா? இல்லை. சட்டங்களை இரும்புக் கரம் கொண்டு அடக்கபோகிறாரா? சட்டம் - ஒழுங்கை சரி செய்து மக்கள் நிம்மதியாக வாழ்வதற்கு உத்தரவாதம் தருவாரா?
சொத்துவரி, மின்சாரக் கட்டணத்தை குறைத்து விடுவார்களா?, கல்வி கடன் ரத்து செய்வார்களா? ஆசிரியர்கள் வீதியில் இறங்கி போராடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி விடுவார்களா? அடிப்படை வசதிகளை மேம்படுத்துவார்களா? என கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து பேசிய அவர், "சென்னையில் மழைநீர் வடிகால்வாயில் ஒருவர் குழியில் விழுந்து இறந்துள்ளார். திமுக அரசு புத்தி கெட்ட ஒரு அறிவு இல்லாத அரசு. மழைக்காலத்தில் யாராவது மழை நீர்வடிகால் பணிகளை மேற்கொள்வார்களா? தற்போது பருவமழை தொடங்கி இருக்கிறது.
திமுக 23 ஆம் புலிகேசி அரசு, காமெடி தர்பார் அதுதான் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். மாநகராட்சியில் சொத்து வரியை ஏற்றிவிட்டார்கள். மாநகராட்சி அடிப்படை கட்டமைப்பு வசதிகளுக்கு கவனம் செலுத்தவில்லை. கோயம்பேட்டில் பள்ளத்தில் விழுந்து உயிரிழந்திருக்கிறார்கள். அசோக் நகரில் ஒருவர் உயிரிழப்புக்கு யார் பொறுப்பு ஏற்பது?.
அம்மா அவர்கள் படத்தில் வசனம் வரும் தமக்கு வாய்த்த அடிமைகள் மிக மிக திறமைசாலிகள். ஆனால், வாய் தான் காது வரை உள்ளது என அது போல கோபாலபுரத்தின் கொத்தடிமைகள் அரசாங்கம் கோமாளி தர்பார் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
மேலும், உதயநிதி ஸ்டாலினை துணை முதலவராக அறிவித்ததன் மூலம் தமிழ்நாடு தலைகீழாக மாறிவிடப் போகிறதா? மாற்றம் யாருக்கு என்றால் புதிதாக வந்த அமைச்சர்களுக்கு, ஏமாற்றம் யாருக்கு என்றால் பொன்முடிக்கு தான். அவரை மாற்றிவிட்டார்கள்.
ஆளுநருக்கும் - பொன்முடிக்கும் இணக்கமான சூழ்நிலை இல்லை என்பதற்காக பொன்முடி உயர்கல்வித்துறை பதவி மாற்றப்பட்டது. பிரதமரிடம் இதைதான் கேட்டீர்களா கேட்டு வந்ததற்கு அப்புறம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அமைச்சர் துரைமுருகன் வெந்து போய் உள்ளார். திமுக ஆட்சி கொடுங்கோல் ஆட்சி, சர்வதிகார ஆட்சி, மக்கள் வஞ்சிக்கபடக்கூடிய சூழல், வரி உயர்வு மூலம் மக்கள் கஷ்டப்படுகின்றனர்" என தெரிவித்தார்.
நடிகர் திலகம், பத்மஸ்ரீ செவாலியே சிவாஜி கணேசன் அவர்களின் 97-வது பிறந்த தினத்தை முன்னிட்டு, இன்று (01.10.2024) சென்னை சத்தியமூர்த்தி பவனில், திரு சிவாஜி கணேசன் அவர்களின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தி, பிறந்தநாள் கேக் வெட்டி, பின்பு… pic.twitter.com/v2RpH8UqHY
— Selvaperunthagai K (@SPK_TNCC) October 1, 2024
'சிவாஜி அற்புதமான நடிகர்': அதேபோல் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 97வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "நடிகர் திலகம், ஆசியாவின் அற்புதமான நடிகர் சிவாஜி கணேசனின் பிறந்தநாள் விழாவில், காங்கிரஸ் சார்பாக மலரஞ்சலி செலுத்தி இருக்கிறோம்.
ஒரு அற்புதமான நடிகர் தேச பற்றாளர். காங்கிரஸ் பேரியக்கத்தின் அசைக்க முடியாத நம்பிக்கை நட்சத்திரமாக இருந்தவர். அவருடைய தந்தை சுதந்திர போராட்ட தியாகி. பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் கைது செய்யப்பட்டு ஆறு ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றவர்.
சிவாஜி கணேசன் இந்தியாவில் நெருக்கடி ஏற்பட்டபோது, சீனா - இந்தியா போராட்டம், வங்கதேசம் - பாகிஸ்தான் - இந்தியா போராட்டம் போதெல்லாம் நடிகர்களையெல்லாம் அழைத்து இன்டர்நேஷனல் பார்டரில் நாடகங்களை நடத்தி நாடக விழாக்கள், திரைப்பட விழாக்கள் நடத்தி அதில் வரும் வசனத்தை இந்திய தேசத்திற்காக கொடுத்தார். திருச்சியில் நடிகர் சிவாஜி கணேசன் சிலை வைக்க வேண்டும் என முதலமைச்சரிடம் காங்கிரஸ் சார்பாக கோரிக்கை வைத்தோம்" என தெரிவித்தார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்