ஈரோடு: மத்திய அரசு வருமான வரிச் சட்டத்தில் 1961-இன் 43B உட்பிரிவு Hஐ மாற்றம் செய்து கொண்டு வந்துள்ளது. அதன்படி, இச்சட்டம் மார்ச் 31ஆம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ள நிலையில், புதிய சட்டத் திருத்தத்தின்படி, இருப்புநிலை குறிப்பு கணக்கில் இருக்கும் வணிகக் கடன் நிலுவைகள் 45 நாட்களுக்கு மேலே சென்றிருந்தால், அவை வருமானமாக கருதப்பட்டு, வருமான வரி செலுத்த வேண்டும் என சட்ட மாறுதல் செய்யப்பட்டுள்ளது.
இதனால் சிறு, குறு தொழில்கள் மட்டுமல்லாமல், ஜவுளி சார்ந்த துறைகளையும் பெரிதும் பாதிக்கும் என்பதால், அந்த துறையினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆகையால், இந்தச் சட்டத்தை ஓராண்டுக்கு தள்ளி வைக்க வேண்டும் என வலியுறுத்தி, ஈரோடு கிளாத் மெர்சண்ட்ஸ் சங்கம் சார்பில், ஜவுளி வணிகர்கள் ஒரு நாள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த போராட்டத்தில் ஈரோடு பன்னீர் செல்வம் பூங்கா, ஆர்.கே.வி ரோடு, மணிக்கூண்டு, திருவெங்கடம் வீதி, ஈஸ்வரன் கோயில் வீதி ஆகிய பகுதிகளில் உள்ள 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஜவுளிக் கடைகள் அடைக்கப்பட்டு, போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது இப்போராட்டத்தின் காரணமாக, சுமார் ரூ.100 கோடி வரை இழப்பு ஏற்படும் எனவும் ஜவுளி வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
இந்த நிலையில், வணிகர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக, விசைத்தறி உரிமையாளர்கள் ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதன்படி, ஈரோடு, பள்ளிபாளையம், வெண்ணந்தூர், திருச்செங்கோடு உள்ளிட்ட பகுதிகளில் இயங்கி வரும் சுமார் 50 ஆயிரம் விசைத்தறிகள் நிறுத்தப்பட்டுள்ளன.
இதனால் 1 லட்சத்திற்கு மேற்பட்ட தொழிலாளர்களுக்கு வேலை இழப்பும், சுமார் 7 கோடி ரூபாய் மதிப்பிலான துணி உற்பத்தியும் பாதிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர். இதனிடையே, சிறு மற்றும் குறு தொழில்கள் மட்டுமின்றி, தனியார் நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து துறைகளும், இந்தச் சட்டத்தை ஒரே சீராக அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.