ஈரோடு: ஈரோடு வீரப்பன் சத்திரம் காவல்துறையினர், போதை ஊசியை விற்பனை செய்த விவகாரத்தில் இந்துமதி, சமீம்பானு, சந்தியா என்ற மூன்று இளம் பெண்கள் உட்பட 9 பேரை கைது செய்து, போதை ஊசி மற்றும் மாத்திரைகளை பறிமுதல் செய்துள்ளனர். இவர்கள் மீது முன்னதாக 2021ஆம் ஆண்டு போதை ஊசி விற்பனை மற்றும் பயன்படுத்தியதாக கைது செய்யப்பட்டு, பல்வேறு வழக்குகள் உள்ளது.
இந்நிலையில், இது குறித்து ஈரோடு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜவகர் கூறியதாவது, “மாவட்ட காவல்துறை மூலம் போதைப்பொருள் ஒழிப்பு பணி, மாணவர்களுக்கு இடையில் உள்ள கஞ்சா புழக்கம், வலி நிவாரண மாத்திரைகளை ஊசி மூலம் பயன்படுத்துதல், பள்ளி மாணவர்களை குறிவைத்து டொப்கோ விற்பனை செய்யப்படுவது போன்ற மூன்று பிரிவுகளின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: கரூரில் சட்டவிரோதமாக போதை மாத்திரைகள் விற்பனை.. மூன்று பேர் கைது!
295 கிலோ கஞ்சா பறிமுதல் : கஞ்சா விற்பனை தடுப்பு நடவடிக்கையாக, இந்த ஆண்டு 295 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 5 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களின் வங்கிக் கணக்குகள் முடக்கம், சொத்து பறிமுதல் போன்ற பொருளாதார ரீதியாக ரூ.1.02 கோடி வரை சொத்துக்கள் முடக்கம் செய்யப்பட்டுள்ளது.
குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை: ஊசி மூலம் வலி மாத்திரை பயன்படுத்துவது குறித்து வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதுவரை 11 ஆயிரத்து 271 வலிநிவாரண மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதற்கும் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஊசி பயன்படுத்துவதன் மூலம் ரத்தம் மூலம் பரவும் எச்ஐவி போன்ற நோய்கள் வருவதற்கு வாய்ப்புள்ளது. இதனால், மாணவர்கள் பாதிப்பை உணர்ந்து போதைப் பழக்கத்தினை கைவிட வேண்டும்.
இது போன்ற சட்டவிரோத போதைப் பழக்கம் குறித்து பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். காவல்துறையினர் சார்பில் தொடர்பு எண் பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ளது. அதற்கு தொடர்பு கொண்டு தெரிவிக்க வேண்டும். உங்களது ரகசியங்கள் காக்கப்படும். இந்த வாரத்தில் மட்டும் 3 ஆயிரம் கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. போதைப்பொருள் தொடர்பாக இந்த வருடத்தில் 208 வழக்குகள் போடப்பட்டுள்ளது.
விழிப்புணர்வு: கடந்த ஆண்டை விட வழக்குகள் குறைந்து உள்ளது. ஆனால், கைப்பற்றப்பட்ட போதைப் பொருட்கள் அதிகமாக உள்ளது. மருந்தகங்களில் மருத்துவர் பரிந்துரை இல்லாமல் வலிநிவாரண மாத்திரை விற்பனை செய்யக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், ஆன்லைன் மூலம் கொரியர் அலுவலகத்திற்கு வரும் சந்தேக்கத்திற்குரிய பார்சல் தொடர்பாக காவல்துறையினருக்கு தெரிவிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளோம். தொடர்ந்து, காவல்துறை சார்பில் போதைத் தடுப்பு என்ற மன்றம் ஆரம்பிக்கப்பட்டு, பள்ளிதோறும் விழிப்புணர்வு செய்யப்பட்டு வருகிறது” இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இது குறித்து ஈரோடு சிட்டி மருத்துவமனை மற்றும் இந்திய மருத்துவ சங்கத் தலைவர் மருத்துவர் அபுல்ஹாசன் கூறியதாவது, “உலக அளவில் கடந்த 10 வருடத்தில் போதைப்பொருள் முறைகேடு 23 சதவீதமாக உள்ளது என்று ஐநா தெரிவித்துள்ளது. இவை இளைஞர்களைப் பாதிக்கிறது. நோய்களுக்கு பயன்படுத்தும் மருந்துகளை அதிகளவில் எடுத்து போதைப்பொருளாக பயன்படுத்துகின்றனர். தற்போது வாசனை திரவியத்திற்கு பயன்படுத்தும் மருந்தை போதைப்பொருளாக பயன்படுத்துகின்றனர். இதனால் தோல் மற்றும் கண் பாதிப்பு ஏற்படும். இது குறித்து இந்திய மருத்துவ சங்கம் தொடர்ந்து ஆராய்ந்து வருகிறது. இதற்காக கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது” என்றார்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்