ஈரோடு: தமிழகத்தில் கோடை வெப்பம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், கோடை வெயிலின் தாக்கம் குறைந்து ஈரோடு உள்ளிட்ட ஒரு சில மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், ஈரோடு மாவட்டத்தில் வெயில் தாக்கம் குறைந்து வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இதையடுத்து ஈரோடு மாநகராட்சி பகுதிகளான கருங்கல்பாளையம், வீரப்பன் சத்திரம், கனிராவுத்தர் குளம், சூளை, சோலார், பழையபாளையம், திண்டல் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளான ஆர்.என் புதூர், தண்ணீர் பந்தல்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக காற்றுடன் கூடிய கனமழை பெய்தது.
இதனால், வெயிலின் தாக்கம் குறைந்ததுடன் கூடுதலாக மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். இதே போன்று, விவசாயத்திற்காக தண்ணீர் இன்றி தவித்துக் கொண்டிருந்த அப்பகுதி விவசாயிகள் தற்போது பெய்த இந்த மழையால் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இருப்பினும், சாலைகளில் வடிகால் கால்வாய்களில் மழைநீர் அதிக அளவு சென்றதால் தண்ணீர் வெளியேறி சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியது. இதனால், அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.
மேலும், மழைக்காக கடைகள் முன்பு நிறுத்தப்பட்ட இருசக்கர வாகனங்களை மழைநீர் சூழ்ந்ததால் வாகனத்தை எடுக்க முடியாமல் அவதிக்குள்ளாகினர். இதனால், வரக்கூடிய பருவமழைக்குள் வடிகால் வசதியை ஏற்படுத்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.