விழுப்புரம்: பல்நோக்கு மருத்துவப் பணியாளர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவா் என்.எஸ்.செல்வராஜ் தலைமையில் மாநில பேரவை கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் துணைத் தலைவா் எம்.அருள்மணி முன்னிலை வகித்த நிலையில், பொதுச் செயலா் மருத்துவா் ஏ.ஆா்.சாந்தி வேலை அறிக்கையை முன் வைத்து விளக்கவுரை ஆற்றினாா்.
இக்கூட்டத்தில், ஆா்.சி.ஹெச் திட்டத்தின் கீழ் ஆரம்ப சுகாதார நிலையங்களில் தூய்மைப் பணியாளா்களாக பணிபுரிந்து, பல்நோக்கு மருத்துவமனைப் பணியாளா்களாக பணியாற்றும் அனைவருக்கும் சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும். வெவ்வேறு மாவட்டங்களில் வெவ்வேறு வேறுபாடுகளுடன் ஊதியம் வழங்கப்படும் நிலையில், அதை தவிா்த்து சமவேலைக்கு சம ஊதியம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மருத்துவத்துறை பணியாளா்களுக்கு பணியை மூன்று சுற்றுகளாக (Shift) மாற்றி நடவடிக்கை எடுத்த தமிழ்நாடு அரசுக்கு நன்றி தெரிவிப்பது. பல்நோக்கு மருத்துவமனைப் பணியாளா்களுக்கு ஊதியத்துடன் கூடிய வார விடுமுறை, தேசிய விடுமுறை வழங்க வேண்டும். மேலும், இலவச சீருடை வழங்க வேண்டும். மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சா் உறுதியளித்தவாறு 60 வயது நிரம்பிய ஆா்.சி.ஹெச். திட்ட தூய்மைப் பணியாளா்களுக்கு பணிக்கொடை அளித்து ஓய்வு வழங்க வேண்டும்.
பல்நோக்கு மருத்துவமனைப் பணியாளா்கள் 400-க்கும் மேற்பட்டோா் பங்கேற்ற இக்கூட்டத்தில், நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றும் பல்நோக்கு மருத்துவப் பணியாளா்கள் அனைவருக்கும் பணிப் பாதுகாப்பு, சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னையில் ஜூலை 2வது வாரத்தில் ஆா்ப்பாட்டம் நடத்துவது உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாநில துணை பொதுச்செயலாளர் ஜே சாந்தி, “இச்சங்கத்தில் 800 பேர் வரை வேலை செய்கிறார்கள். அவர்களுக்கு மாவட்டம் தோறும் ஊதியம் சமமாக வழங்கப்படுவதில்லை. 8 ஆயிரம், 9 ஆயிரம் என ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. ஒரே ஒரு மாவட்டத்தில் மட்டுமே 19000 ரூபாய் சம்பளம் வழங்கப்படுகிறது.
எனவே சமவேலை, சம ஊதியம் என்பதை தமிழ்நாடு அரசு உடனடியாக கொண்டு வர வேண்டும் தொடர்பான எங்களுடைய கோரிக்கையை முன்வைக்கின்றோம். எங்களுடைய கோரிக்கையை அரசு நிறைவேற்றாத பட்சத்தில் வருகின்ற ஜூலை மாதம் இரண்டாம் வாரத்தில் சென்னையில் மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் நிா்வாக அலுவலா் கவிஞா் ம.ரா.சிங்காரம், சுகாதார ஆய்வாளா் சங்கத்தின் மாநிலத் தலைவா் என்.சிவகுரு, ஏஐடியுசி விழுப்புரம் மாவட்ட செயலா் ஆ.செளரிராஜன், அகில இந்திய வங்கி ஊழியா்கள் சங்கத்தின் மாவட்ட செயலா் எஸ்.கல்யாணசுந்தரம் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா்.
இதையும் படிங்க: விழுப்புரம் அருகே காட்டுப்பன்றி கடித்து வன அலுவலர் உள்பட 9 பேர் காயம்! - Wild Boar Bite In Viluppuram