சென்னை: கட்டுமான பொறியியல் (சிவில் இன்ஜினியரிங்) துறையின் பேராசிரியர் இந்துமதி நம்பி, ஈடிவி பாரத்திற்கு அளித்த சிறப்பு பேட்டியில், இந்தியாவின் கார்ப்பன் வெளியேற்றத்தை குறைக்கும் திட்டங்கள், சுற்றுச்சூழல் சவால்கள் மற்றும் புதுமையான தொழில்நுட்ப தேவைகள் குறித்த விரிவான கருத்துகளை பகிர்ந்துள்ளார்.
இந்தியாவின் கார்ப்பன் பூஜியம் இலக்காக 2070-ஆம் ஆண்டு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டிற்குள் கார்ப்பன் வெளியேற்றத்தை பூஜியம் நிலைக்கு கொண்டு செல்வது இந்திய அரசின் முக்கிய நோக்கமாகும். இதற்கான பல தொழில்நுட்ப முன்முயற்சிகள் மற்றும் திட்டங்களை செயல்படுத்த ஐஐடி போன்ற கல்வி, ஆராய்ச்சி மையங்கள் உதவுகின்றன.
கார்பன் வெளியேற்றத்தை குறைக்க "கார்பன் ஜீரோ சேலஞ்ச்" என்ற போட்டி நடத்தப்பட்டது. இதில் ஆராய்ச்சியாளர்கள், மாணவர்கள் மற்றும் தொழில்முனைவோர் பல்வேறு தீர்வுகளை முன்வைத்தனர்.
ஆபத்தில் ஐம்பூதங்கள்:
சுற்றுச்சூழல் மாசுபாடு மற்றும் மனித செயல்களால் நிலம், நீர், காற்று, நெருப்பு மற்றும் ஆகாயம் ஆகிய ஐம்பூதங்களும் ஆபத்தில் உள்ளன.
- நிலம்: மாசு மற்றும் இயற்கை வளங்களின் விரைவான சுரண்டல் காரணமாக பல பகுதிகள் பாலைவனமாக மாறுகின்றன என்பதை ஆய்வுகள் எடுத்துக்காட்டுகிறது.
- நீர்: ஆறுகள், ஏரிகள் மாசடைந்து, மனிதன் மற்றும் பிற உயிரினங்களின் பயன்பாட்டிற்கு தகுதி இழந்துள்ளன.
- காற்று: காற்றில் துகள்மாசுகள் மற்றும் வியாழக்கதிர்கள் அதிகரித்து, பல்வேறு நோய்களுக்கும் உயிரின அழிவிற்கும் காரணமாகின்றன.
- நெருப்பு மற்றும் ஆகாயம்: எரிவாயுக்கள், தொழில்துறை கரிமங்கள் உள்ளிட்டவை பூமியின் வெப்பத்தை அதிகரிக்கச் செய்கின்றன.
கழிவுநீர் சுத்திகரிப்பு:
தொழிற்சாலைகளிலிருந்து நேரடியாக ஆறுகள், ஏரிகளில் கழிவுநீர் கலப்பது நீர் மாசுபாட்டின் காரணியாக இருக்கிறது. இதனால், உடலில் ஆன்டிபயாட்டிக் எதிர்ப்பு நுண்ணுயிர்களின் வளர்ச்சி அதிகரிப்பது கண்டறியப்பட்டுள்ளதாக பேராசிரியர் இந்துமதி நம்பி தெரிவிக்கிறார்.
கூடுதலாக அவரளித்த தகவல்களின் படி, ஐஐடி ஆராய்ச்சி மையத்தில், கழிவுநீர் சுத்திகரிப்பு தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், திருப்பூர் பனியன் சாய ஆலைகளில் ‘இந்தோ சைமன் டெக்னாலஜி’ சென்டரின் உதவியுடன் புதிய இயந்திரம் பொருத்தப்பட்டது. இந்த இயந்திரம் சாயக் கழிவுகளை சுத்திகரித்து ஆற்றுகளில் கலப்பதைத் தடுக்கும் வகையில் இயற்கைக்கு ஏற்ற முறையில் செயல்படுகிறது.
மருந்து தொழிற்சாலைகள்:
மருந்து தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுகளில் இருக்கும் ஆன்டிபயாட்டிக்கின் பாகங்களை நீக்க, புதிய தொழில்நுட்பங்களை சென்னை ஐஐடி பரிசோதனை செய்து வருகின்றனர். ஆன்டிபயாட்டிக் எதிர்ப்பு முக்கிய சவாலாகப் பார்க்கப்படுகிறது என்கிறார் இந்துமதி.
நீரில் ஏற்கனவே இருக்கும் ஆன்டிபயோட்டிக் காரணமாக, பாக்டீரியாவால் ஏற்படும் நோய்களுக்கு மருந்துகள் செயல்படாமல் போகிறது. உலக சுகாதார அமைப்பு இதை மிகப்பெரிய ஆபத்தாக "அடுத்த கொரோனா" என எச்சரித்துள்ளது.
இதை கட்டுப்படுத்த தேசிய அளவில் ஆன்டிபயாட்டிக் அக்ஷன் திட்டங்கள் அவசியமாக உள்ளது. தற்போது, கேரளா, மகாராஷ்டிரா மாநிலங்களில் இது அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிலும் இதற்கான திட்டங்களைத் தொடங்க அரசு ஆலோசித்து வருகிறது.
மாணவர்களின் பங்களிப்பும் கண்டுபிடிப்புகளும்:
ஐஐடி மாணவர்களின் புதிய கண்டுபிடிப்புகளை தொழில்முனைவோர் மையங்களில் பதிவு செய்து, தொழிலாக மாற்றுவதற்கான வாய்ப்புகளை உருவாக்குகிறது. கடந்த நான்கு ஆண்டுகளில், 100க்கும் மேற்பட்ட கண்டுபிடிப்புகள் மூலம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு முயற்சிகள் முன்னேற்றப்பட்டுள்ளன என்று கூறினார் பேராசிரியர் இந்துமதி நம்பி.
இதையும் படிங்க |
சூழலியல் சவால்களை கட்டுப்படுத்த புதிய தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளை மாணவர்கள் முன்னிறுத்தினர். சிறந்த கண்டுபிடிப்புகளுக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கப்படுகிறது. இப்படி சுற்றுச்சூழல் பாதுகாப்பில் தொழில்நுட்பத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் சென்னை ஐஐடி செயல்பட்டு வருகிறது.
- குறைந்த செலவில் தொழில்நுட்ப வளர்ச்சி: கழிவுநீர் சுத்திகரிப்பு, காற்று மாசுபாடு தடுப்பு போன்ற தொழில்நுட்பங்களை குறைந்த செலவில் கொண்டு வர வேண்டும்.
- புதுமையான ஆய்வுகள்: ஐஐடி போன்ற மையங்கள் ஆராய்ச்சி செய்து தொழில்நுட்ப மாதிரிகளை உருவாக்குகின்றன. அதனை தொடர்ந்து தொழில்முனைவோர் மற்றும் நிறுவனங்கள் பெரிய அளவில் அவற்றை செயல்படுத்த வேண்டும் என்பதே ஆய்வு துறை பேராசிரியர்களின் வேண்டுகோளாக உள்ளது.
சூழலியலில் நீடித்த முன்னேற்றம்:
சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு நவீன தொழில்நுட்பங்கள் மிக அவசியமாகும். கார்ப்பன் வெளியேற்றத்தை பூஜியம் நிலைக்கு கொண்டு செல்லும் இந்திய அரசின் முயற்சிகளில் ஐஐடிகளின் பங்களிப்பு மிக முக்கியமானதாக உள்ளது.
மக்கள், தொழில்முனைவோர், மற்றும் அரசு ஒத்துழைப்பு மூலம் சுற்றுச்சூழல் சவால்களை சமாளிக்க முடியும் என்பதை உறுதியாக பதிவு செய்திருக்கிறார் சென்னை ஐஐடியின் கட்டுமானப் பொறியியல் துறையின் பேராசிரியர் இந்துமதி நம்பி. பூமியின் வருங்காலத்திற்காக நாம் இன்று தெளிவான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்; இதையே இந்த சிறப்பு பேட்டியின் வாயிலாக இந்துமதி வலியுறுத்தியுள்ளார்.