கோயம்புத்தூர்: தமிழ்நாட்டில் கடந்த இரண்டு மாதமாக பல்வேறு மாவட்டங்களில் வெயில் சதம் அடித்து வருகிறது. குறிப்பாக, கடந்த வாரம் ஈரோடு, சேலம் மாவட்டத்தில் 100 முதல் 109 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகி, இந்தியாவில் அதிக வெப்பம் பதிவான பகுதியில் மூன்றாவது இடத்தைப் பிடித்தது. மேலும், தமிழ்நாட்டில் இயல்பை விட கூடுதலாக வெயில் பதிவாகும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கோயம்புத்தூரில் கடந்த சில நாட்களாக 103, 104 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகி இருந்தது.
இது வரும் நாட்களில் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும், வரும் நாட்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனிடையே, வழக்கத்திற்கு மாறாக உள்ள வெயிலில் இருந்து தற்காத்துக் கொள்ள பொதுமக்கள் பல்வேறு வழிமுறைகளைக் கையாண்டு வருகின்றனர். குறிப்பாக, உடல் சூட்டைத் தணிக்க இளநீர், மோர், சர்பத், கம்மங்கூழ் போன்றவற்றை தொடர்ச்சியாகப் பருகி வருகின்றனர்.
மேலும், கோயம்புத்தூரை ஒட்டியுள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் கடுமையான வறட்சி நிலவுவதால், உணவு மற்றும் தண்ணீரைத் தேடி ஏராளமான வன விலங்குகள் ஊருக்குள் படையெடுக்கின்றன. குறிப்பாக, யானைகள் கூட்டம் வனத்தில் இருந்து வெளியேறி, தண்ணீர் மற்றும் உணவு தேடி குடியிருப்பு பகுதிகளுக்குள் புகும் நிலை உருவாகி உள்ளது. வன விலங்குகளின் தாகத்தை தீர்க்க வனத்துறை சார்பில் கோயம்புத்தூர் வனக்கோட்டத்தில் உள்ள 7 வனச்சரகங்களிலும் 101 தண்ணீர் தொட்டிகள் அமைக்கப்பட்டு நீர் நிரப்பப்பட்டு வருகிறது.
மதுக்கரை, கோவை, சிறுமுகை உள்ளிட்ட வனச்சரகங்களில் உள்ள வனப்பகுதிக்குள் சோலார் மூலம் தண்ணீர் தொட்டிகளில் நீர் நிரப்பப்பட்டு, வன விலங்குகளின் தாகம் தீர்க்கப்படுகிறது. இருப்பினும், உணவுப் பற்றாக்குறை நிலவுவதால், அதனைப் போக்க வனத்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
இது குறித்து கோயம்புத்தூர் மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ் கூறுகையில், “கோவை வனக்கோட்டத்தில் உள்ள ஏழு வனச்சரகங்களில் தண்ணீர் தொட்டிகள் அமைக்கப்பட்டு நீர் நிரப்பப்பட்டு வருகிறது. கடந்த வருடம் மற்றும் இந்த வருடம் பெரியநாயக்கன்பாளையம் மற்றும் மதுக்கரை வனச்சரகத்தில் கூடுதலாக தண்ணீர் தொட்டிகள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இது தவிர, அடர்ந்த வனப்பகுதிக்குள் உள்ள தொட்டிகளுக்கு சோலார் மூலம் தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது.
கோயம்புத்தூர் வனக்கோட்டத்தில் மொத்தம் 101 தண்ணீர் தொட்டிகள் உள்ளது. இதனை நாள்தோறும் வனப் பணியாளர்கள் கண்காணித்து நீர் நிரப்பி வருகின்றனர். இது தவிர, நீர்ச்சத்து மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க தண்ணீர் தொட்டிக்கு அருகேயும், நீர் நிலைகளிலும் உப்புக் கட்டிகள் வைக்கப்பட்டு வருகிறது” எனத் தெரிவித்தார்.
இது குறித்து, சூழலியல் ஆர்வலரும், ஓசை அமைப்பின் தலைவருமான காளிதாசன் கூறுகையில், “வன விலங்குகள் தவிர, பறவைகளும் வெயில் தாக்கத்தால் பாதிக்கப்படுகின்றன. காலநிலைக்கு ஏற்றாற்போல் பறவைகள் வாழ பழகியிருக்கும். காலநிலை மாற்றத்தால் வெப்பம் அதிகரிக்கும் போது விலங்குகள், பறவைகள் முடிந்த வரை வேறு இடங்களுக்கு இடம் பெயரும். முடியாதவை அங்கேயே உயிரிழக்கும் அபாயம் உள்ளது.
ஆகவே, பறவைகளுக்கு வீடுகளில் சிறிய தொட்டியில் தண்ணீர் வைக்க வேண்டும். ஊர்வன, இருவாழ்விகள் காலநிலை மாற்றத்தால் பெரிதும் பாதிக்கப்படுகின்றன. அதைப் பற்றிய தரவுகள் நம்மிடம் இல்லையென்றாலும், உலகம் முழுவதும் இதன் பாதிப்புகள் எதிரொலிக்கின்றன.
காலநிலை மாற்றத்தால் சில உயிரினங்கள் இல்லாமல் போகும் சூழல் ஏற்பட்டுள்ளது. குறிப்பிட்ட உயரத்தில் காணக்கூடிய பறவைகள், தற்போது அதற்கு அதிகமான உயரத்திற்கு மேலே செல்கிறது என பறவைகள் மனிதர் சலீம் அலி கூறியுள்ளார். அந்தளவிற்கு காலநிலை மாற்றம் பறவைகளை பாதித்துள்ளது. மனித குலத்தையும், மற்ற உயிர்களையும் காப்பாற்ற போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். புவியைக் காப்பாற்றும் அக்கறையோடு செயல்பட்டால் தான் எதிர்கால சந்ததிகளையும் நன்றாக வாழ முடியும்” என தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஏற்காடு வனவிலங்குகளைக் காக்க தண்ணீர் தொட்டி வைத்த தன்னார்வலர்கள்! - Water Tank To Protect Wildlife