சென்னை: அமலாக்கத் துறைக்கு இயக்குநர் பொறுப்பு காலியானதால் அமலாக்கத்துறையின் இடைக்கால இயக்குநராக ராகுல் நவீன் நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் இவர் தற்போது சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு வருகை தந்துள்ளார்.
இதையடுத்து சென்னையில் உள்ள அமலாக்கத்துறை அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்தி வருகிறார். இதில் மதுரை, கோயம்புத்தூர், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அமலாக்கத்துறை மண்டல அலுவலர்களும் சென்னை வரவைக்கப்பட்டு அவர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
இதில் தமிழகத்தில் பதிவு செய்யப்பட்ட முக்கிய வழக்குகள் குறித்தும், முக்கிய அரசியல் பிரமுகர்கள் தொடர்பான வழக்குகள் குறித்தும், அடுத்த கட்டமாக எந்த வழக்குகள் குறித்து ஆதாரங்கள் திரட்டி வருகிறது என்பது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
அதுமட்டுமில்லாமல் நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரக்கூடிய சூழ்நிலையில், சென்னையில் தேர்தல் அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் அமலாக்கத்துறை மற்றும் வருமானவரித்துறை அதிகாரிகளும் கலந்து கொள்ள இருக்கின்றனர்.
இந்த நிலையில் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு அமலாக்கத்துறை அதிகாரிகள் எவ்வாறு ஆயத்தமாகி வருகிறார்கள், எந்த மாதிரியான கண்காணிப்புகள் நடைபெற உள்ளது என்பதெல்லாம் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பேசப்படும் எனக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: த்ரிஷா குறித்து தவறாகப் பேசியவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் - அண்ணாமலை வலியுறுத்தல்!