தேனி: நாடாளுமன்ற மக்களவை தேர்தல் தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனால் அரசியல் கட்சிகள் தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தல் தேதி அறிவிப்பு வெளியான நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது. அதனப்டி, ரூ.50 ஆயிரத்திற்கு மேல் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து செல்லப்படும் பணங்கள் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தேனி மாவட்டத்தில் 24 மணி நேரமும் பறக்கும் படையினர், தேர்தல் கண்காணிப்பு சிறப்பு படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், நேற்று போடிநாயக்கனூர் அடுத்த கோடாங்கிபட்டி மெயின் ரோட்டில் தேர்தல் கண்காணிப்பு பறக்கும் அணியினர் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது தேனியில் உள்ள அரசு அங்கீகாரம் பெற்ற வங்கியில் இருந்து போடியில் உள்ள அதே வங்கிக் கிளைக்கு ரூ.20 லட்சம், தனியார் வாடகை வாகனத்தில் வங்கி பணியாளர்கள் கொண்டு வந்துள்ளனர். கோடங்கிபட்டி அருகே வாகனத்தை ஆய்வு செய்த தேர்தல் பறக்கும் படையினர், உரிய ஆவணங்கள் இல்லாததால் ரூ.20 லட்சத்தை பறிமுதல் செய்து போடிநாயக்கனூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்துள்ளனர்.
வங்கி ஏ.டி.எம் இயந்திரத்தில் பணம் நிரப்புவதற்காக பணம் கொண்டுவரப்பட்டதாக ஊழியர்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வாகனத்தில் உள்ள பதிவு எண்ணும், ஆவணங்களில் உள்ள விவரங்களும் முரண்பட்டு இருந்த நிலையில், உரிய ஆவணங்கள் இல்லாததால் மாவட்ட வருமான வரித்துறையினர், வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வரவழைக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டனர்.
வருமான வரித்துறையினரின் ஒப்புதலின்படி கைப்பற்றப்பட்ட ரூ.20 லட்சம் போடிநாயக்கனூரில் உள்ள சார்நிலைக் கருவூலத்திற்கு, காவல்துறை பாதுகாப்புடன் கொண்டு சென்று ஒப்படைக்கப்பட்டு அங்கு பணம் உள்ள பெட்டியுடன் சீல் வைக்கப்பட்டு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து, உரிய ஆவணங்கள் கொடுத்துவிட்டு பணத்தை பெற்றுக் கொள்ளுமாறு வங்கிப் பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறை தினம் என்பதால், வங்கி ஏடிஎமில் நிரப்புவதற்கு கொண்டு செல்வதாக கூறப்பட்ட நிலையில் ஆவணங்களில் இருந்த குளறுபடி காரணமாக தேர்தல் பறக்கும் படையினரால் கைப்பற்றப்பட்டு போடிநாயக்கனூர் தாலுகா அலுவலகத்திற்கு கொண்டுவரப்பட்டு சார்நிலைக் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பண்ணாரியம்மன் கோயிலில் பிச்சை எடுத்ததே ரூ.1.50 லட்சமா? போதையில் திரிந்த பெண்ணிடம் திருப்பூர் போலீஸ் விசாரணை - Flying Squad Seized Money