வேலூர்: வேலூர் மாவட்டத்தில் மொத்தமாக 15 லட்சத்து 28 ஆயிரத்து 273 வாக்காளர்கள் உள்ளனர். வேலூர் மாவட்டம் முழுவதும் 757 இடங்களில் 1,568 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. 7,638 வாக்குச்சாவடி அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் கட்டுப்பாட்டுக் கருவிகள் தலா 1,874 பயன்படுத்தப்படுகிறது. 2,030 வி.வி.பேட் கருவிகள் பயன்படுத்தப்படுகிறது.
190 பதட்டமான வாக்குச் சாவடிகளாகக் கண்டறியப்பட்டு, 246 நூல் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 148 மண்டல அலுவலர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர். 1,568 வாக்குச்சாவடி மையங்களில் 891 வெப் கேமராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியவர்கள் வாக்களிக்க வசதியாக சாய்வு தளம் வசதி, சக்கர நாற்காலி, கழிவறை, குடிநீர் வசதி, சாமியானா பந்தல் வசதி, இருக்கை வசதி ஆகியவை செய்யப்பட்டுள்ளன. 656 வாக்குச்சாவடி அமைவிடங்களில் முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வாக்களிக்க ஏதுவாக 656 சக்கர நாற்காலிகள் தயார் நிலையில் உள்ளன.
மேலும், அவர்களுக்கு உதவிபுரிய 656 தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். குழந்தைகளைப் பாதுகாக்க ஏதுவாக, 4 மற்றும் அதற்கு மேற்பட்ட வாக்குச்சாவடிகள் அமைந்துள்ள 73 வாக்குச்சாவடி அமைவிடங்களில் குழந்தை பாதுகாப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
அரக்கோணம்: அரக்கோணம் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட 1,699 வாக்குச்சாவடி மையங்களுக்குத் தேவையான வாக்குப்பதிவு இயந்திரங்கள், கண்ட்ரோல் யூனிட், விவி பேட் மற்றும் தேர்தலுக்குத் தேவையான 121 வகையான பொருட்கள் ஆகியவை, அந்தந்த வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பி வைக்கும் பணி தொடங்கியது.
தமிழ்நாட்டில் நாடாளுமன்ற பொதுத் தேர்தல் ஒரே கட்டமாக நாளை (ஏப்ரல் 19) காலை 7 மணிக்கு தொடங்குகிறது. அரக்கோணம் நாடாளுமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளர் எஸ்.ஜெகத்ரட்சகன், அதிமுக வேட்பாளர் எல்.விஜயன், பாமக வேட்பாளர் கே.பாலு, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அப்சியா நஸ்ரின், பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் பாண்டியன் மற்றும் சுயேச்சைகள் என மொத்தம் 26 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
அரக்கோணம் நாடாளுமன்றத் தொகுதியில் ராணிப்பேட்டை, ஆற்காடு, சோளிங்கர், அரக்கோணம் மற்றும் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த காட்பாடி, திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த திருத்தணி ஆகிய 6 சட்டமன்றத் தொகுதிகள் அடங்கும். இந்த 6 சட்டமன்றத் தொகுதியிலும் மொத்தம் 1,699 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 26 வேட்பாளர்கள் களத்தில் உள்ளதால், ஒவ்வொரு வாக்குச்சாவடி மையத்திலும் 2 வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகிறது.
குறிப்பாக, ஆந்திர மாநில எல்லையை ஒட்டி அரக்கோணம், திருத்தணி ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இருப்பதால், வேட்பாளர்களின் பெயர்கள் தமிழ் மற்றும் தெலுங்கில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், கண் பார்வை அற்றவர்கள் சுலபமாக சின்னத்தைத் தேடுவதற்காக வாக்குப்பதிவு இயந்திரத்தின் ஓரம் பிரெய்லி முறையில் சின்னங்கள் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் நாளில் பயன்படுத்தப்படும் அழியாத மை, பேனா, கவர் உள்ளிட்ட வகையான 121 வகையான பொருட்களும் சாக்குப் பையில் போட்டு அந்தந்த வாக்குச்சாவடி மையங்களுக்குப் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வேனில் அனுப்பும் பணி ராணிப்பேட்டை வருவாய்க் கோட்டாட்சியர் அலுவலகம் மற்றும் ஆற்காடு வட்டாட்சியர் அலுவலகம் , சோளிங்கர் வட்டாட்சியர் அலுவலகம் அரக்கோணம் வருவாய்க் கோட்டாட்சியர் அலுவலகம் ஆகிய இடங்களில் இருந்து அதிகாரிகள் முன்னிலையில் அனுப்பி வைக்கப்பட்டது.
மேலும் காட்பாடி, திருத்தணி ஆகிய சட்டமன்றத் தொகுதியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையங்களுக்கும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேர்தலுக்குத் தேவையான பொருட்களும் அதிகாரிகள் முன்னிலையில் அனுப்பி வைக்கப்படுகிறது.
இதையும் படிங்க: உலகின் 100 செல்வாக்கு மிகுந்த நபர்களின் பட்டியலில் நடிகை ஆலியா பட்! - Actress Alia Bhatt